சுவா சூ காங் வட்டாரத்தில் பிரபலமாக உள்ள ஒரு தாவரப் பண்ணையில் ஏற்பட்ட தீயில் அந்த வளாகத்தின் கால் பகுதி அழிக்கப்பட்டது. அங்கு கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட செல்லப் பறவைகள் இறந்து போயின.
டெராஸ்கேப்ஸ் தாவரப்பண்ணையில் தீ மூண்டதாக கடந்த புதன்கிழமை இரவு 7.35 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.
தீ சுமார் 90 நிமிடங்களில் அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டது.
20 அடிக்கு 20 அடி பரப்பளவு உள்ள இடத்தில் தீ எரிந்ததாக அது தெரிவித்தது. தீயைக் கட்டுப்படுத்த, ஒரு கட்டத்தில் ஐந்து அதிவேக தண்ணீர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
மிகவும் மாறுபட்ட செடிகளை விற்பனை செய்வதற்காக டெராஸ்கேப்ஸ் பண்ணை பிரபலமாக உள்ளது. சாடியில் வளர்க்கும் நெப்பெந்தஸ் எனப்படும் செடிகள், ஃபிலோடென்டிரன் போன்றவற்றை அது விற்று வருகிறது.
டெராஸ்கேப்ஸ் பண்ணையை ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் 11,000 பேரும் இன்ஸ்டகிராமில் 19,000க்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கின்றனர். தீச்சம்பவம் பற்றி சமூக ஊடகத்தில் பதிவிட்ட பண்ணைக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தாவரப்பண்ணைக்கு நிதி திரட்ட பல்வேறு தனிநபர்களும் அமைப்பினரும் திட்டமிட்டு வருகின்றனர். டெராஸ்கேப்ஸ் பண்ணையின் இரண்டு உரிமையாளர்களில் ஒருவரான சாண்டி சோ, 47, புதன்கிழமை இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டதாகக் கூறினார். அரை மணி நேரம் கழித்து தீ பற்றி அவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்தபோதும் நள்ளிரவுக்குப் பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக திரு சோ தெரிவித்தார்.

