வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த வாகன ஓட்டுநருக்கு 15 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான 34 வயது டியோ காய் ஸியாங்கிற்கு எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் ஈசூன் ரிங் ரோட்டில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்தது. சாலைச் சந்திப்பில் வலது புறம் திரும்பும்போது டியோ வழிவிட மறுத்ததால் விபத்து நேர்ந்தது.
பாதிக்கப்பட்டவர் 50 வயது மலேசியரான லியோங் சீ கியோங். அவருக்கு மூளையில் மோசமான காயம் ஏற்பட்டது. முகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்து 12 மணிநேரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக டியோ மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமல் வாகனத்தை ஓட்டியதன் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை டியோ முன்னதாக ஒப்புக்கொண்டார்.

