தாயின் அடையாள அட்டையைக்
கொண்டு 21 முறை வாகனம் வாடகை
தனது தாயின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு பெண் சென்ற ஆண்டு 21 முறை வாகனங்களை வாடகைக்கு எடுத்திருக்கிறார். வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாத 21 வயது கைலீ லீ வென் ஹுய் அந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
தாயின் அடையாள அட்டை விவரங்களைக் கொண்டு வாகன வாடகைத் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி அவர் வாகனங்களை வாடகைக்கு எடுத்தார். ஆள்மாறாட்டம், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய ஒவ்வொன்றுக்கும் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை லீ ஒப்புக்கொண்டார்.
வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும். கணினியில் இருந்த தகவல்களை அத்துமீறிப் பெற்றது உள்பட லீ மீது சுமத்தப்பட்ட இதர மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனைவிதிப்பின்போது கருத்தில்கொள்ளப்படும்.
11.5 விழுக்காடு குறைவான வாகன உரிமைச் சான்றிதழ்கள்
அடுத்த மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரை வழங்கப்படவுள்ள வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை 11.5 விழுக்காடு குறைவாக இருக்கும். வாகன விலை அடிக்கடி மாறுவதைத் தவிர்ப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட முறையின்கீழ் சான்றிதழ்கனின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
ஐந்து பிரிவுகளின்கீழ் மொத்தமாக 3,526 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. கடந்த மே மாதத்திற்கும் இம்மாதத்திற்கும் இடையே மொத்தம் 3,982 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
1,600 சிசி அல்லது அதற்கும் குறைவான கொள்ளளவைக் கொண்ட வாகனங்களுக்கான பிரிவின்கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை 11.3 விழுக்காடு குறையும். 110 கிலோவாட் வரை சக்தி கொண்ட மின்சாரத்தில் முழுமையாக இயங்கும் வாகனங்களும் இப்பிரிவில் அடங்கும்.
பெரிய வாகனங்களுக்கான பிரிவில் 10.8 விழுக்காடு குறைவாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கூடுதல் நன்கொடை திரட்ட இரட்சண்ய சேனை முயற்சி
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக சிங்கப்பூரின் இரட்சண்ய சேனைக்கு வரும் நன்கொடை குறைந்திருந்தது. இப்போது உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கவும் தேவைப்படுவோருக்கான ஆதரவை மேம்படுத்தவும் கூடுதல் நன்கொடையைத் திரட்ட அந்த அமைப்பு எண்ணம் கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இரட்சண்ய சேனையின் 'ரெட் ஷீல்ட் அப்பீல்' நிகழ்ச்சி நேற்று கொன்ரேட் சென்டெனியல் ஹோட்டலில் நடைபெற்றது. ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் யும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் பிளாஸ்டிக் மறுபயனீட்டு நிறுவனத்தின் தலைமையகம்
மறுபயனீட்டு பொருளியல் நிறுவனமான 'ஆர்ச்வே' சிங்கப்பூரில் அதன் உலகளாவிய தலைமையகத்தைத் தொடங்கியுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த அந்நிறுவனம், 'வெர்ஜின் பிளாஸ்டிக்' எனும் பிளாஸ்டிக் வகையை மறுபயனீடு செய்து மாத்திரை போத்தல்கள், ஆடைகளை மாட்டும் கம்பிகள் உள்ளிட்டவற்றைச் செய்து வருகிறது. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தயாராவதே 'வெர்ஜின் பிளாஸ்டிக்'.
ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 400 டன் எடைகொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 12 விழுக்காட்டுப் பொருள்கள் மட்டுமே எரிக்கப்படுவதாகவும் ஒன்பது விழுக்காட்டுப் பொருள்கள் மறுபயனீடு செய்யப்படுவதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்தது.

