மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் $470,000 சந்தை மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதோடு, $63,097 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜூலை 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அதிகாரிகள் பூன் லே, சாங்கி, செங்காங், தோ பாயோ ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
ஜூலை 19 அன்று சுமாங் வாக்கில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 56 வயது சிங்கப்பூர் ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 66 கிராம் ஹெராயின், 16 கிராம் ஐஸ், $4,327 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜூலை 21 அன்று 22 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த ஹெராயின், ஐஸ், கஞ்சா, எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றோடு $34,530 ரொக்கமும் சிக்கின.
மற்றொரு சோதனையில் ஒரு தனியார் வீட்டிலிருந்த 46 வயது சிங்கப்பூர் பெண்ணும், 41 வயது வெளிநாட்டு ஆடவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பல வகையான போதைப் பொருள்களும், ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி வருகிறது.

