நிறுவனங்கள், வேலைகள் உருமாறும் சூழலில் அந்தத் தேர்ச்சிகளுக்கு தேவை அதிகம் என ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அறிக்கை கூறுகிறது
சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லா தொழில்துறைகளும் வேலை பாணிகளும் உருமாறுகின்றன. இந்தச் சூழலில் வாழ்க்கைத்தொழில் ஆலோசனை, பயிற்சி தொடர்பான தேர்ச்சிகள் முக்கியமானவையாக ஆகி இருக்கின்றன என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலையிடச் செயல்திறன் மேம்பட அல்லது வேறு வாழ்க்கைத் தொழில்களுக்கு மாறிக்கொள்ள மக்களுக்கு ஆலோசனை கூறி பயிற்சி அளித்து உதவ வேண்டிய தேவை அதிகரிக்கிறது.
இந்நிலையில், ஆற்றல் மேம்பாடு, செயல்திறன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தேர்ச்சிகளுடன் கூடியவர்களுக்குத் தேவை அதிகமாக உள்ளது என்று நேற்று வெளியிடப்பட்ட 'வேலை-தேர்ச்சி காலாண்டு கண்ணோட்டம்' என்ற அந்த அறிக்கை தெரிவித்தது.
பெரியவர்களுக்கான கல்வி, பயிற்சியில் ஈடுபட்டுள்ள பட்டத்தொழிலர்களுக்கான தேர்ச்சிகளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பெரியவர்களுக்கான கல்விபோதனை, பயிற்சித் தொழிலை, கல்வித் தொழில்நுட்பங்களும் தொடர்புடைய தேர்ச்சிகளும் ஆற்றல்மிக்கதாக ஆக்குகின்றன.
வேலை இடத்தில் கற்றுக்கொள்ளும் போக்கு முக்கியமானது என்பதற்கான அங்கீகாரம் அதிகரிக்கிறது என்றது அறிக்கை.
கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் நேற்று நடந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
பயிற்சி மற்றும் பெரியவர்களுக்கான கல்வித் துறையின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவருகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ள அல்லது மீண்டும் தேர்ச்சி பெற முயலும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, அத்தகைய தேர்ச்சி மேம்பாடுகளில் அதிக ஊழியர்கள் அடிக்கடி ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கம் ஆதரவு அளித்த செயல் திட்டங்களில் 2021ல் ஏறத்தாழ 660,000 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த எண்ணிக்கை 2020ல் 540,000 ஆக இருந்தது.
முதலாளிகளுக்கும் பொருளியலுக்கும் முக்கியமான தேர்ச்சிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறையை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மேம்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலை, தேர்ச்சி காலாண்டு கண்ணோட்ட அறிக்கை சென்ற டிசம்பரில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

