செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d9f8ecf7-928c-4c87-9333-a5522160e606
-

போதைப்பொருள்: 100 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஜூலை 18ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடையில் தீவு முழுவதும் எடுத்த நடவடிக்கையில் 100 பேர் கைதுசெய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

அவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் சுமார் $470,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

பூன் லே, சாங்கி, செங்காங், தோ பாயோ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அந்த நடவடிக்கையின்போது மொத்தம் $63,097 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

கைதானவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

பெட்ரோல், டீசல் விலை இறக்கம்

சிங்கப்பூரில் பெட்ரோல் நிலைய விற்பனை விலை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ஏழு காசு வரை குறைந்தது.

டீசல் விலை $2.91 முதல் $2.93 வரை விற்கப்பட்டது. 92 ஆக்டேன் பெட்ரோல் விலை $2.89ஆக விற்கப்பட்டது. 95 ஆக்டேன் பெட்ரோல் விலை $2.94ஆக இருந்தது. 98 ஆக்டேன் பெட்ரோல் $3.14 முதல் $3.43 வரை விற்கப்பட்டது.

6 பேருக்கு புதுவகை தொற்று

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை உள்ளூரில் புதிதாக ஆறு பேருக்கு ஓமிக்ரான் பிஏ2.75 வகை கிருமி தொற்றியது. ஜூலை 14 ஆம் தேதி சிங்கப்பூர் வந்த இரண்டு பேருக்குத் தொற்று இருந்தது முதலில் தெரியவந்தது.

இலேசான அறிகுறிகளுடன் இருந்த அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொவிட்-19 நோயாளிகள் 758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக மொத்தம் 1,468 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து, நாட்டு மருந்து தரவுத்தளம்

சுகாதார அறிவியல் ஆணையம், உடல் நலனுக்கான ஊட்டச்சத்து மருந்துகளை, பாரம்பரிய நாட்டு மருந்துகளைக் கையாளும் நிறுவனங்களுக்காக அறிவிப்புச் செயல்திட்டம் ஒன்றை கட்டம் கட்டமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தும்.

அந்தத் திட்டம் கட்டாயமானதல்ல. உடல்நல சுகாதார பொருள்களை வாங்குவதற்கு முன்னதாக அவை பாதுகாப்பானவையா, சான்றிதழ் பெற்றவையா என்பதை வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக்கொள்ளும் வகையில் தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவது அந்தச் செயல்

திட்டத்தின் நோக்கம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவில் பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய முதலாவது இந்த வகை தரவுத்தளம் இதுவே என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.