அருணா கந்தசாமி
இன நல்லிணக்கத்தை ஒரு நொடி நேரம்கூட நாம் கிள்ளுக்கீரையாகக் கருதக்கூடாது என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்தினார்.
இன நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாத்துப் பலப்படுத்த வேண்டும் என்பதை வருங்காலத் தலைமுறையினரிடம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நல்லிணக்க தினத்தை முன்னிட்டு, பன்முக கலாசாரம், அனைவரையும் உள்ளடக்குதல் என்ற கருப்பொருளுடன் இளையர்களுக்காக முதன்முதலாக மக்கள் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு டோங் பேசினார்.
இன நல்லிணக்க தினத்தை இப்போது நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம் என்றாலும் அது 1964ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரங்களை நினைவுகூர்வதை நாம் மறந்துவிடக்கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
ராஃபிள்ஸ் கண்ட்ரி கிளப் மனமகிழ் மன்றத்தில் நடந்த கருத்தரங்கிற்கு சுகாதார மற்றும் சட்ட அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தலைமை தாங்கினார்.
நற்பணிப் பேரவையின் இளையர் மன்றத் தலைவர் இளமாறன், சிங்கப்பூரின் நீச்சல் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் பங்காளித்துவப் பிரிவுத் தலைவர் மிச்செல் டே, ரோசஸ் ஆஃப் பீஸ் எனும் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான முகமது இர்ஷாத்,
ஆஃப்ரோ சிங்ஸ் எனும் சமூக ஊடகப் பக்கத்தின் உரிமையாளர் வெண்டி மேரி ஜெலின், மக்கள் கழகத்தின் மலாய் நற்பணிப் பேரவையின் இளையர் துணைக்குழுவின் தலைவர் சுலைக்கா ஸுல்கிஃப்லி ஆகியோர் கருத்தரங்கத்தின் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.
அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கத்தை தக்கவைத்துக்கொள்வது பற்றியும் புதிய சிங்கப்பூரர்களைச் சமூகத்தில் ஒன்றிணைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கும் போக்கை மக்களிடத்தில் பேணி வளர்ப்பதில் விளையாட்டுகள் பெரும் பங்கு வகிப்பதாக ஜோசஃப் ஸ்கூலிங் கூறினார்.
இனம், சமயம், மொழி, பாலினப் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுதந்திரமும் பேச்சுரிமையும் இருப்பது அவசியம் என்று வெண்டி மேரி ஜெலின் தெரிவித்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய சமூக சேவை ஆர்வலர் இளமாறன், 29, இதுபோன்ற கலந்துரையாடலில் இளையர் பங்கேற்று பலவற்றைத் தெரிந்துகொண்டு சமுதாயத்திற்குத் தங்களால் முடிந்த அளவு பங்காற்ற எண்ணுவது மனநிறைவாக இருக்கிறது என்றார்.
சிங்கப்பூரில் இளையர்கள் நல்லிணக்கத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் அறிந்துகொண்டதாக கருத்தரங்கப் பேச்சாளரான முகமது இர்ஷாத், 32, கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனுபவம் பயனுள்ளதாக இருந்தது என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்கள் தெரிவித் தனர். பல்கலைக்கழக, பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்களோடு புராஜெக்ட் ஹில்ஸ், தேசிய இளையர் சாதனை விருது மன்றம், இளம் ஆண்கள் கிறிஸ்துவ சங்கம் போன்ற இளையர் சார்ந்த அமைப்புகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றன.
மக்கள் கழகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவின் 15ஆம் ஆண்டு விழாவை போற்றும் விதமாக 'நல்லிணக்க சமூகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

