முரண்பாடு களைய பணிப்பெண்களோடு முதலாளிகளும் உதவி நாடலாம்
வெளிநாட்டுப் பணிப்பெண்களின் வேலை தொடர்பான பிரச்சினை
களைக் கையாள புதிய இல்லப் பணியாளர் நிலையம் ஒன்று நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டு உள்ளது.
தெம்பனிஸ் ஜங்ஷன் இன்கம் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 'சிடிஇகனெக்ட்' என்னும் இந்நிலையத்தில் பணிப்பெண்களின் முதலாளிகளும் உதவி நாடலாம். பிரச்சினை தீர வழிதேடும் பணிப்பெண்களுக்கு இங்கு முதலாளிகள் ஆலோசனை வழங்கலாம்.
இதேபோன்ற ஒரு பணிப்பெண் சேவை நிலையம் 75 பாசிர் பாஞ்சாங் ரோட்டில் 2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்பட்டது. இந்த சேவை நிலையங்கள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முயற்சியில் உருவானவை.
வார இறுதி நாள்களில் ஓய்வு எடுக்கவும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிலையங்கள் பணிப்பெண்களுக்குப் பயன்படும். விழாக் கொண்டாட்டங்கள், கைவினைத் திறன் பயிலரங்குகள் போன்றவையும் இங்கு இடம்பெறும்.
முதல்முறை சிங்கப்பூர் வரும் பணிப்பெண்களிடம் நேர்காணல் நடத்தவும் இல்லப் பணியாளர் நிலை யம் பயன்படும்.
நேர்காணலின்போது வாழ்க்கையையும் வேலையையும் சரிசெய்து எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று மதிப்பிட மனிதவள அமைச்சின் சார்பில் இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது.
வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குள் நேரடியாக, பணிப்பெண்களின் சொந்த மொழியில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
2017ஆம் ஆண்டிலிருந்து கிட்டத் தட்ட 60,000 பணிப்பெண்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
கொள்ளைநோய் காரணமாக 2020 ஏப்ரல் முதல் இணையம் வழியாக நடத்தப்பட்ட நேர்காணல்கள் இந்த மாத நடுப்பகுதியில் இருந்து மீண்டும் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றன.
தாமதமாகச் சம்பளம் வழங்குதல், முதலாளிகளால் சட்டவிரோதமாக வேலைக்கு எடுத்தல், பாதுகாப்பற்ற வகையில் வேலை வழங்குதல் போன்ற பொதுவான பிரச்சினைகள் இதுபோன்ற நேர்காணல்
களின்போது வெளிப்படுகின்றன.
இதன் அடிப்படையில் முதலாளிகளிடம் இல்லப் பணியாளர் நிலையம் கருத்து கேட்கும். பணிப்பெண்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் கருத்துவேறுபாடு உள்ளதா என்று அப்போது கேட்டு அறியப்படும்.
பிரச்சினை கடுமையானது எனத் தெரியவரும் பட்சத்தில் அதுபற்றி மனிதவள அமைச்சிடமோ அல்லது காவல்துறையிடமோ இந்நிலையம் புகார் அளிக்கும்.
ஆண்டிறுதியில் பணிப்பெண்கள் விவகாரம் தொடர்பாக மேலும் பல நடவடிக்கைகள் இடம்பெறும் என்று நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
வேலையில் சேர்ந்த ஓராண்டுக்குள் இரண்டாம் முறையாக பணிப்பெண்களிடம் நேர்காணல் நடத்து வதும் புதிய நடவடிக்கைகளில் அடங்கும்.

