விடாமுயற்சி வென்று தந்த வெகுமானம்

விடாமுயற்சி வென்று தந்த வெகுமானம்

4 mins read
b11d431a-1ca9-42c7-a80f-23efcdb41d80
-

யுகேஷ் கண்­ணன்

தான் செல்ல விரும்­பிய பல்­க­லைக்­க­ழ­கம், எட்டா கனி­யா­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பள்­ளி­யின் படத்தை அறை சுவ­ரில் ஒட்டி, ஒவ்­வொரு நாளும் அதைப் பார்த்­துத் தன் இலக்கை அடைய வேண்­டும் என்ற வெறி­யு­டன் படித்­த­வர்­தான் ஃபயாஸ்.

பொது­வாக உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் விரை­வு­நி­லைக்­குத் தகு­தி­பெ­றா­விட்­டால் தொடக்­கக்­கல்­லூ­ரிக்­கும் பல்­கலைக்­க­ழ­கத்­திற்­கும் செல்­வது சிர­ம­மான ஒன்­றா­கக் கரு­தப்­படுகிறது. அத்­த­கைய எண்­ணங்­களை உடைத்­தெ­றி­யும் வகை­யில் 26 வயது முக­மது ஃபயாஸ் முக­மது ஃபகார் சாதித்­துக் காட்­டி­யுள்­ளார்.

உயர்­நி­லைப்­பள்­ளி­யில் சாதா­ரண நிலை மாண­வ­ராக இருந்த இவர், இவ்­வாண்டு சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மதிப்­புக்­கு­ரிய 'வேலடிக்டோரியன்' எனும் பிரிவுபசார சொற்பொழிவாற்றும் மாணவர் தகுதிக்கு உயர்ந்­துள்­ளார்.

அர­சி­யல்­சார் அறி­வி­யல் துறை­யில் உய­ரிய இளங்­கலை 'ஹானர்ஸ்' பட்டத்துடன் வரலாற்றுப் பாடத்திலும் பட்டம் பெற்­றுள்­ளார்.

சாதா முதல் சாதனை வரை...

நீ ஆன் தொடக்­கப்­பள்­ளி­யில் தனது கல்­விப் பய­ணத்­தைத் தொடங்­கிய ஃபயாஸ், ஒரு சரா­சரி மாண­வ­ரா­கத்­தான் இருந்­தார்.

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுக்­காக கடி­ன­மாக உழைத்­த­போ­தும் எதிர்­பார்த்த மதிப்­பெண்­க­ளைப் பெற முடி­ய­வில்லை என்று பகிர்ந்­து­கொண்­டார்.

இவ­ரின் நண்­பர்­கள் பலர், உயர்­நி­லைப்­பள்­ளி­யில் விரை­வு­நி­லைக்­குத் தகு­தி­பெற, ஃபயாஸ் சாதா­ரண நிலை­யில் படிக்க நேரிட்­டது. இது தமக்­குப் பெரும் பின்­னடை­வா­கத் தோன்­றி­ய­போ­தும் மன­தைத் தேற்­றிக்­கொண்டு நீ ஆன் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் தன் படிப்­பைச் வழக்கநிலையில் தொடர்ந்­தார் ஃபயாஸ்.

லட்­சி­யம் அதி­கம் இல்­லாது இருந்த அவ­ரைத் தட்டி எழுப்­பிய ஆண்­டாக உயர்­நிலை மூன்று அமைந்­தது.

கற்­றல் பய­ணங்­க­ளுக்­காக விரை­வு­நிலை மாண­வர்­கள் தொடக்­கக்­கல்­லூ­ரி­களுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். ஆனால் வழக்கநிலை மாண­வர்­கள் பெரும்­பா­லும் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி­களுக்கு மட்­டுமே அழைத்­துச் செல்­லப்­பட்­டதை அவர் கவ­னித்­தார்.

'வழக்கநிலை மாண­வர்­க­ளால் தொடக்­கக்­கல்­லூ­ரிக்­குச் செல்ல முடி­யாதா? செல்­வ­தற்­கான முயற்­சியை எடுத்­தால்?' போன்ற கேள்­வி­கள் இவர் மன­தில் எழத் தொடங்­கின.

தொடக்­கக்­கல்­லூ­ரிக்­குச் சென்­றாக வேண்­டும் என்ற குறிக்­கோள் அவர் மன­தில் ஆழப் பதிந்­தது.

நண்­பர்­கள் இவர் லட்­சி­யக் கனவை அறிந்து ஏள­ன­மா­கச் சிரித்­த­னர்.

ஆனால், ஃபயாஸ் சோர்ந்­து­போ­கா­மல் தனது வழக்­க­நி­லைத் தேர்வை முடித்­தார். உயர்­நிலை ஐந்­துக்கு முன்­னேறி, சாதா­ர­ண­நி­லைத் தேர்­வில் சிறப்­புத் தேர்ச்­சி­யும் பெற்­றார். ஈசூன் தொடக்­கக்­கல்­லூ­ரிக்­குள் காலடி எடுத்து வைத்­தார்.

தூரம் ஒரு பொருட்­டல்ல...

பள்ளி செல்­வ­தற்­காக உபி வட்­டா­ரத்­தில் வசிக்­கும் இவர், தின­மும் ஈசூன் வரை பய­ணம் செய்­தார். அந்­தப் பய­ணங்­க­ளால் களைப்பு ஏற்­பட்­ட­போ­தும் லட்­சி­யத்தை நோக்­கிய பய­ண­மா­கத்­தான் ஃபயாஸ் அவற்றைக் கரு­தி­னார். ஆனால், அவ­ருக்கு அடுத்த கவலை காத்­தி­ருந்­தது.

'தொடக்­கக்­கல்­லூ­ரிக்கு வந்­து­விட்­டோம், அடுத்து என்ன?' என்ற கேள்வி அவருள் உதித்­தது.

தனது தொடக்­கக்­கல்­லூ­ரி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத் தகு­தி­பெ­றும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைவு என்­பதை உணர்ந்­தார். எப்­ப­டி­யா­வது அதே பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மாண­வ­ராக இணைய வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார்.

லட்­சி­யக் கனவு மெய்ப்­பட...

பள்ளி முடிந்­த­தும் பல்­க­லைக்­க­ழக வளாகத்­திற்­குச் சென்று தன் பள்­ளிப் பாடங்­க­ளைப் படிக்­கத் தொடங்­கி­னார்.

அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்­வ­தற்­கான அனைத்­துத் தகு­தி­களும் தனக்கு உண்டு என்ற எண்­ணத்­தைத் தன்­னுள் விதைத்­தார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சுவ­ரொட்டி ஒன்­றைத் தன் அறை­யில் ஒட்­டி­னார் ஃபயாஸ். சோர்­வும் சோம்­ப­லும் தோன்­று­வ­தாக இருந்­தால் உடனே அந்­தச் சுவ­ரொட்­டி­யைப் பார்த்து மீண்­டும் தான் இழந்த ஊக்­கத்­தைப் பெற்­ற­தா­க இவர் கூறுகிறார்.

தன் தொடக்­கக்­கல்­லூரி நண்­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் அத்­த­ரு­ணங்­களில் பெரும் ஆத­ர­வாக இருந்­த­னர் என்­றும் தெரிவிக் கிறார்.

மேல்­நி­லைத் தேர்­வில் எதிர்­பார்த்த மதிப்­பெண்­க­ளைப் பெறா­த­போ­தும் நம்­பிக்­கை­யு­டன் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கலை­கள், சமூக அறி­வி­யல் பள்ளி­யில் சேர்­வ­தற்­காக விண்­ணப்­பித்­தார்.

விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஃபயாஸ் மன­மு­டைந்து போனார். வேறு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குச் செல்­லத் தயா­ரா­னார்.

ஆனால், இரு வாரங்­களில் அவர் விண்­ணப்­பித்த பல்கலைக்கழகத் துறையிலேயே இடம் இருந்த கார­ணத்­தால் நினைத்­த­படியே அங்கு இணைந்­தார் ஃபயாஸ்.

கவ­லை­கள் கிடக்­கட்­டும்...

நினைத்­தது நடந்­து­விட்­டது என்ற மன­நிறை­வு­டன் தனது இளங்­கலை பட்­டப்­ப­டிப்­பைத் தொடங்­கிய ஃபயாஸ், அடுத்த தடைக்­கல்­லைச் சந்­தித்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழல் கார­ண­மாக பயண முக­வர்­க­ளான தன் பெற்­றோர் இரு­வ­ரும் தங்­கள் வேலையை இழந்­த­னர். தனது செல­வு­க­ளைத் தானே பார்த்­துக்­கொள்ள வேண்­டிய சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­டார் ஃபயாஸ்.

பள்ளி முடிந்­த­பின் மாலை நேரங்­களில் ஒரு துணைப்­பாட ஆசி­ரி­ய­ராக மாறி­னார். வட்­டி­யில்லா கடன் ஒன்றை 'மெண்­டாக்கி' அவ­ருக்கு வழங்­கி­யது.

மேலும், ஊக்­கத் தொகைத் திட்­டங்­களின்­கீழ் இவ­ரது பள்­ளி­யும் பல்­வேறு உத­வி­க­ளை­ச் செய்­தது.

இருப்­பி­னும் அவ்­வப்­போது செல­வு­களைச் சமா­ளிப்­பது கடி­ன­மாக இருந்­த­தாக விளக்குகிறார்.

சவால்­மிக்க இந்­தச் சூழ­லில் பல்­கலைக்­க­ழ­கப் படிப்­பில் தேற முடி­யுமா என்ற கேள்வி அவருள் எழுந்தது.

முடிந்­த­வரை முயற்சி செய்­வோம், இறுதி­யில் வருத்­தம் ஏது­மில்­லா­மல் தேர்ச்சி பெறு­வோம், பாடங்­களை விரும்­பிப் படிப்­போம் என்று தனக்­குள் கூறிக்­கொண்டு தன் கல்­விப் பய­ணத்தை உற்­சா­கத்­து­டன் தொடர்ந்­தார்.

அந்­தத் திடமே அவ­ருக்கு வெற்­றிக்­கனியை இன்று பெற்­றுத் தந்­துள்­ளது.

தகுதி என்­பது...

ஒரு­வ­ரது தகுதி என்­பது தன் மனம் முடிவு­செய்­வ­தைப் பொறுத்தே உள்­ளது என்­ப­தற்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கு­கிறார் ஃபயாஸ்.

பாது­காப்பு சார்ந்த துறை­யில் நாட்­ட­முள்ள ஃபயாஸ், தற்­போது 'எவெர்ப்­பி­ரிட்ஜ்' நிறு­வ­னத்­தில் அபா­ய­நிலை ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

தனது வட்­டா­ரத்­தின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு முக­மது ஃபாமி அலி­மா­னு­டன் இணைந்து பல தொண்­டூழிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தன் மூலம் சமூ­கத்­திற்­கும் பங்­காற்றி வரு­கிறார் இந்த இளை­யர்.

வாழ்­வில் என்­றும் விடா­மு­யற்­சி­யு­டன் செயல்­பட்­டால் வெற்றி நிச்­ச­ய­மென நம்பு­வது­டன் தன் வாழ்க்கை மூலம் அதை நிரூ­பித்­தும் காட்­டி­யுள்­ளார் ஃபயாஸ்.