மக்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பங்காற்ற வேண்டும் என்பது சட்டம் பயிலும் 20 வயது ஷ்ருதியின் கனவு. மக்களுக்கு நன்மை தரும் விதமாகத் தன் வேலை அமைய வேண்டும் என்பது மின்னணுவியல் பொறியியல் துறை மாணவர் 25 வயது லோகேசனின் லட்சியம். அண்மையில் இவ்விருவருக்கும் போக்குவரத்து அமைச்சின் உபகாரச் சம்பள விருதும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் முதலாம்ஆண்டு சட்டம் பயின்று வரும் 20 வயது ஷ்ருதி ஹரிணி ஜனார்த்தனன், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார். சட்டம் பயின்றாலும் நீதிமன்றத்தில் வாதாடுவதைவிட அரசாங்கத் திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்கிறார் இவர்.
இதன் காரணமாக, துரிதமாக வளர்ந்துவரும் துறைகள் சார்ந்த அமைச்சுகள் ஒன்றில் பணிபுரிய இவர் விரும்பினார்.
வெவ்வேறு துறைகள் தொடர்பான தகவல்களை இவர் திரட்டத் தொடங்கியபோது, கடல்துறை தனக்குச் சுவாரசியமாகத் தோன்றியதால் அதையே தேர்ந்தெடுத்ததாக ஷ்ருதி தெரிவிக்கிறார்.
சட்ட அறிவு இத்துறையில் பணியாற்ற நேரடியாக உதவாமல் போனாலும் அதன் மூலம் கற்கும் திறன்களும் உத்திகளும் மக்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த உறுதுணையாக இருக்குமென இவர் நம்புகிறார்.
உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்றதன்வழி தன் குடும்பத்தின் பணச் சுமையைக் குறைக்க முடியும் என்றும் இவர் நம்புகிறார்.
இத்துறையில் தன் பணியைச் சிறப்பாகக் கையாள, புதிய திறன்கள் பலவற்றைக் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றாலும் உற்சாகத்துடன் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார் ஷ்ருதி.
நிலப்போக்குவரத்து ஆணையத்தின் உபகாரச் சம்பளத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் லோகேசன் ராஜேந்திரன், 25, பெற்றுள்ளார். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துச் சேவை தொடர்பான ஒரு துறையில் பணிபுரியும் ஆர்வம் தனக்கு ஏற்பட்டதாக இவர் தெரிவித்தார்.
பொறியியல் துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், ரயில்களின் மின்சாரத் திறனாற்றல் பிரிவில் பணியாற்ற உள்ளார்.
பல்கலைக்கழக இறுதியாண்டில் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளதால் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை. இருப்பினும், ஆணையத்துடனான தனது சேவைக் காலத்தை லோகேசன் நான்காண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.
நிபுணத்துவப் பொறியாளர் உரிமம் பெற்று இத்துறையில் தன் அறிவை வளர்க்க விரும்பும் இவர், அதற்குச் சில ஆண்டுகள் தேவையென்பதை அறிந்து, இம்முடிவை எடுத்ததாகக் கூறு கிறார். எதிர்காலத்திலும் தொடர்ந்து இத்துறையில் சேவையாற்றத் தான் விரும்புவதாகவும் லோகேசன் தெரிவித்தார்.
செய்தி: யுகேஷ் கண்ணன்
படங்கள்: போக்குவரத்து அமைச்சு

