சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மேலும் இரண்டு குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. இவற்றுடன் நேற்றிரவு நிலவரப்படி சிங்கப்பூரில் எட்டு பேருக்கு குரங்கம்மை இருப்பது உறுதியாகிவிட்டது. இந்த எண்மரில் நால்வர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் எஞ்சிய நால்வர் உள்ளூர்வாசிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு இடையே தொடர்பு ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. இறுதியாக உறுதிசெய்யப்பட்ட இருவரில் ஒருவர் எஸ்டோனியாவைச் சேர்ந்த 46 வயது ஆடவர். மற்றொருவர் 26 வயது சிங்கப்பூர் ஆடவர்.
எஸ்டோனிய ஆடவர் இம்மாதம் 21ஆம் தேதியன்று லண்டனிலிருந்து இங்கு வந்ததாக சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது. இடுப்பு, தொடை பகுதித் தோலில் தடிப்புகள், காய்ச்சல், வீக்கம் ஆகிய அறிகுறிகளுக்குப் பின், அவருக்கு குரங்கம்மை இருப்பது ஞாயிற்றுக்கிழமையன்று உறுதியானது.
அதே இடுப்பு, தொடை பகுதித் தோலிலும் உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் சிங்கப்பூர் ஆடவருக்கும் தடிப்புகள் ஏற்பட்டன.
அவருக்கும் குரங்கம்மை இருப்பது ஞாயிறன்று உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலக சுகாதார நெருக்கடியாக குரங்கம்மைத் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமையன்று அறிவித்தது. 70 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்ட குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகிவிட்டன.
நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து உள்ளூர், எல்லை கட்டுப்பாடுகளில் மாற்றம் இருப்பது குறித்துக் கேட்கப்பட்டதற்கு, நிறுவனம் பரிந்துரை செய்திருந்த குரங்கம்மைத் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மே மாதம் முதல் நடப்பில் உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்தது.
குரங்கம்மை தொடர்பில் செயல்திறனுடன் பரிசோதித்தல், தொற்றை உறுதிப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தும் நிபுணத்துவமும் ஆற்றலும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைக்கு உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இன்னோர் ஆணுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களை இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இதன்படி, குரங்கம்மை தொற்றக்கூடிய அபாயத்தில் இருப்போருடனும் அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.
'நாடளவில் தடுப்பூசி போடத்
தேவையில்லை'
இதற்கிடையே, இது அனைத்துலக ரீதியில் கவலைக்குரிய ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி என உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மைத் தொற்று குறித்து அறிவித்தது பற்றி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குரங்கம்மை தொடர்பில் நிறுவனத்தின் அபாயநிலை மதிப்பீடு, 'மிதமான அளவு' என்றுள்ளது. தற்போது சிங்கப்பூரில் உறுதிசெய்யப்பட்ட எட்டு குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றைச் சமூகத்தினரிடையே பரப்பியதாகச் சான்றுகளும் இல்லை என்றார்.
கொவிட்-19 தொடர்பில் 20 தனிமை உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். ஆனால், குரங்கம்மை தொடர்பில் மூன்று முதல் நான்கு தனிமை உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். எனவே, தற்போதைய நிலவரப்படி குரங்கம்மைத் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தடுப்பூசி போடத் தேவை இல்லை என்றும் திரு ஓங் பதிவில் தெரிவித்தார்.

