மோசடி நபர்கள் தங்களைப் போன்று பாசாங்கு செய்து மின்னஞ்சல்கள் அனுப்பிப் பணம் பறிப்பதாக நன்கொடை திரட்டும் இணையத்தளமான 'கிவிங்.எஸ்ஜி' (Giving.sg) தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களின் கடன் அட்டை விவரங்களையும் தனிநபர் தகவல்களையும் இந்த மோசடி பேர்வழிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என அமைப்பு எச்சரித்துள்ளது.
தேசிய தொண்டூழியர், கொடையாளர் நிலைய (என்விபிசி) நிர்வாகத்தின்கீழ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்தது.
'கிவிங்.எஸ்ஜி' தரவுத்தளத்தின் பாதுகாப்பு வளையம் மீறப்படவில்லை என்றும் தற்போது அமைப்பு அதன் பாதுகாப்புச் செயல்முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டது.
அதிகாரிகளுக்கும் மோசடி தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விசாரணை நடந்துவருவதாகவும் என்விபிசி குறிப்பிட்டது.
லாப நோக்கமற்ற அமைப்புகள், நிறுவனங்கள், பொதுத் துறை முகவைகள் ஆகிவற்றுக்கு இடையே அறப்பணி ஊக்குவிக்கும் விதமாக என்விபிசி இயங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 625 நன்கொடை அமைப்புகள் இதன் கிவிங்.எஸ்ஜி இணையத்தளத்தைப் பயன்படுத்தி நிதி திரட்டி வருகின்றன. மேலும், தேசிய அளவில் மின்னிலக்க நன்கொடைச் சேவை வழங்கும் முன்னணி அமைப்பாகவும் என்விபிசி விளங்குகிறது.
அங்கீகரிக்கப்படாத இணையப் பக்கங்கள், சந்தேகத்திற்குரிய இணைய முகவரிகள் கொண்ட போலி இணையத்தளங்கள், அதிகமான சொற்பிழைகளுடைய அறிவிப்புகள் ஆகியவற்றின் மூலம் மோசடிக்காரர்கள் குறிவைக்கலாம். இதை அறிந்துகொண்டு தனிநபர் தகவல்கள் ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று என்விபிசி அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு கிவிங்.எஸ்ஜி தளத்தின் மூலம் என்றும் இல்லாத அளவுக்கு $95.5 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது. 2010ல் என்விபிசி தொடங்கப்பட்டு திரட்டப்பட்ட ஆக அதிக தொகை இது.

