பாட்டுப் பாடுவது, இசைக் கருவி வாசிப்பது, சாகசங்களில் ஈடுபடுவது எனத் தங்களுக்கு இருக்கும் திறன்களைப் பொது இடங்களில் மக்களிடம் வெளிப்படுத்த விரும்புவோருக்கு (பஸ்கிங்) இணையம் மூலம் முன்பதிவு செய்யும் முறையை தேசிய கலைகள் மன்றம் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தப் புதிய அணுகுமுறை குறித்து சில பஸ்கிங் கலைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் தங்கள் திறனை வெளிப்பிடுத்த பஸ்கிங் கலைஞர்களுக்காக இம்மாதம் ஒதுக்கப்பட்ட இடம் கிடைக்காமல் குறைந்தது இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய முன்பதிவு முறையில் உள்ள சில பிரச்சினைகளால் குறிப்பிட்ட சில திறன்களை வெளிப்படுத்த விரும்புவோருக்குத் தகுந்த இடம் கிடைக்காமல் போனதாக சிங்கப்பூர் பஸ்கிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜோனத்தன் கோ கூறினார்.
அதுமட்டுமல்லாது, சிலர் இடங்களைப் பல மணி நேரத்துக்கும், பல நாள்களுக்கும் முன்பதிவு செய்துவிடுவதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போவதாக திரு கோ தெரிவித்தார்.
புதிய முன்பதிவு அணுகுமுறையின்படி பஸ்கிங் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 இடங்களில் மணி நேர அடிப்படையில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஒருவர் ஓர் இடத்தில் அதிகபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பதிவு செய்யலாம்.
அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 300 பஸ்கிங் கலைஞர்கள் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சம வாய்ப்பு கிடைக்க இந்தப் புதிய அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மன்றம் கூறியது.
மாதந்தோறும் 1ஆம், 15ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யத் தொடங்கலாம். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு இடம் கொடுக்கப்படும்.

