பல்கலைக்கழகத்தை ஏமாற்றிப் பணம் பறித்தவருக்குச் சிறை
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை (என்யுஎஸ்) ஏமாற்றி $39,000க்கும் அதிகமான தொகையைப் பறித்த குற்றத்துக்காக அங்கு ஆய்வாளராகப் பணிபுரிந்த ஆடவருக்கு 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 வயது தாமஸ் டே கொக் ஹியோங்கிற்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் 18 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
ஏமாற்றிப் பெற்ற பணத்தை அவர் பல்கலைக்கழகத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பணி நிமித்தம் செலவு செய்ததாகப் பொய் கூறி அவர் பல்கலைக்கழகத்திடம் பணம் பெற்றுகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சொந்த செலவுக்கும் தமது குடும்பம் செய்த செலவுக்கும் அவர் பணம் பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. செலவு செய்யாமலும் பொய்க் கணக்கு காட்டியும் அவர் பணம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைத் திருத்தி அவர் உயர்த்திக் காட்டியதாகவும் கூறப்பட்டது.
தமது குற்றம் வெளியே தெரியாமல் இருக்க அவர் ரசீதுகளை மாற்றி அமைத்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
'முழுமையான சோதனை போக்குவரத்தைப் பாதிக்கும்'
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனையிட்டால் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் மோசமடையும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் வர்த்தகமும் பயணங்களும் வெகுவாகப் பாதிப்படையும் என்று அது கூறியது.
ஏறத்தாழ $32 மில்லியன் பெறுமானமுள்ள சொகுசு பொருள் மோசடிக்குக் காரணமான தம்பதியர் அண்மையில் லாரியின் கொள்கலன் ஒன்றில் ஒளிந்துகொண்டு சிங்கப்பூரிலிருந்து தப்பினர்.
அதையடுத்து சோதனைச் சாவடிகளில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் பாலங்களை பலர் பயன்படுத்துவதாகக் கூறிய ஆணையம், உச்சநேரங்களின்போது ஒவ்வொரு வாகனத்தையும் சோதனையிட்டால் அது உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் துவாஸ் சோதனைச்சாவடிக்குச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலும் மோசமான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது.

