பகல், இரவு ஆகிய இரு வேளைகளுக்கும் உகந்த நடவடிக்கைகளும் சேவைகளும் கிளார்க் கீ பகுதியில் இடம்பெறவுள்ளன. ஓராண்டுகால புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு இது சாத்தியமாகும்.
பொதுவாக இரவுக் கேளிக்கை நடவடிக்கைகளுக்குப் பிரபலமான கிளார்க் கீயில் பகல், இரவு இரு வேளைகளுக்குமான சேவைகளை வழங்கும் வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்குவர்.
அதற்கு வகைசெய்யும் புதுப்பிப்புப் பணிகள் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டிலிருந்து தொடங்கும் என்று இதன் உரிமையாளர் நிறுவனமான கேப்பிட்டாலேண்ட் தெரிவித்தது. புதுப்பிப்புப் பணிகளுக்கான மொத்தச் செலவு 62 மில்லியன் வெள்ளி.
அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் பணிகள் நிறைவடையும். பணிகள் மேற்கொள்ளப்படும் வேளையிலும் கிளார்க் கீ தொடர்ந்து இயங்கும்.
குளிர்சாதன வசதிகளை மேம்படுத்துவது, பாதுகாக்கப்பட்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களுக்குச் சாயம் பூசுவது உள்ளிட்டவை புதுப்பிப்புப் பணிகளில் அடங்கும்.
அவை நிறைவடைந்த பிறகு பொதுவாக இரவு நேரத்தில் மட்டும் இயங்கும் கடைகளுடன் காலை, மதிய உணவு விற்கும் கடைகளும் இப்பகுதியில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
'ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட்'டின் உணவகத்தைக் கொண்ட மளிகைக் கடை, இசைக் கருவிகளை விற்கும் கடையான ஸ்வீ லீ, ஒரு சிகை அலங்காரக் கடை உள்ளிட்டவை கிளார்க் கீயில் அமையும்.
சுற்றுப்பயணிகள் மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கியிருக்கும் வேளையில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவில் 34 விழுக்காடு பசுமை அம்சங்களுக்குச் செலவிடப்படும் என்று கேப்பிட்டாலேண்ட் கூறியது.
புதுப்பிப்புப் பணிகள் உள்ளூர் நிறுவனங்களான மெட்டா ஆர்க்கிடெக்சர், ஃபார்ம்வொர்க்ஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் ஆகியவற்றின் தலைமையில் மேற்கொள்ளப்படும். அதிகம் வெளிப்படாத கிளார்க் கீ பகுதியின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்வதே அந்நிறுவனங்களின் இலக்கு என்று கேப்பிட்டாலேண்ட் குறிப்பிட்டது.

