சிங்கப்பூர் பணவீக்கம் இன்னும் ஒருசில மாதங்களில் 13 ஆண்டு காணாத உச்சத்திற்குச் செல்லக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
உலகளவிலான நிச்சயமற்ற நிலவரம் காரணமாக இது சாத்தியப்படும் என்று பொருளியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரேன் போர், விநியோகத் தொடர் இடையூறுகள், இறுக்கமான ஊழியர் சந்தை, சீனாவின் பொதுமுடக்கம் ஆகியவற்றால் எழுந்துள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக பொருள்களின் விலையும் சேவைகளின் கட்டணமும் உயர்ந்து வருகின்றன.
இந்த உயர்வு இவ்வாண்டின் எஞ்சிய காலாண்டிலும் தொடரக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஒருவரான செலினா லிங் கூறுகையில், "பணவீக்கம் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை. இருப்பினும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த நிலை வரலாம்," என்றார்.
ஓசிபிசி வங்கியின் பொருளியல் ஆய்வு மற்றும் உத்தி பிரிவின் தலைவராக இவர் உள்ளார்.
சிங்கப்பூரின் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 6.7 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்தன.
2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான பணவீக்க விகிதம்.
உணவு, உடை, போக்குவரத்து, வீடமைப்பு ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்ததன் காரணமாக மே மாதம் 5.6 விழுக்காட்டுக்குச் சென்ற பணவீக்கம், அதற்கு அடுத்த மாதமும் ஏற்றம் கண்டது.
மொத்த மக்கள்தொகையில் மேல்தட்டு 20 விழுக்காட்டு குடும்பங்கள் இவ்வாண்டில் 6% பணவீக்க அதிகரிப்பைச் சந்தித்தன.
அதேவேளை, கீழ்நிலையில் உள்ள 20 விழுக்காட்டு குடும்பங்கள் 4.2% உயர்வை அனுபவித்தன. இடையில் உள்ள 60 விழுக்காட்டினர் 4.9% பொருள், சேவை விலை உயர்வைச் சந்தித்தன.
ஒட்டுமொத்தமாக, அனைத்து குடும்பத்துக்குமான பயனீட்டாளர் விலைக் குறியீடு ஜனவரி முதல் ஜூன் வரை 5.2 விழுக்காடு உயர்ந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்
படையிலான ஒப்பீடு இது.
கடந்த ஆண்டு இரண்டாம் பாதியில் 3.1 விழுக்காடு மட்டுமே இந்தக் குறியீட்டின் விகிதம் பதிவானது.
மேல்நோக்கிச் செல்லும் பணவீக்க அழுத்தம் இன்னும் வலுவாகவே காணப்படுவதாக யுஓபி வங்கியின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் சுவான் டெக் கின் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தின் 6.7 விழுக்காட்டு பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் போக்குவரத்துச் செலவுகள் மட்டும் 3.4 விழுக்காடு பங்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள், போக்கு வரத்து பயணக் கட்டணம் ஆகியவற்றோடு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணமும் ஏற்றம் கண்டது இந்த அதிகரிப்புக்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பணவீக்க அதிகரிப்பை முன்கூட்டியே கணித்த சிங்கப்பூர் நாணய ஆணையம், வழக்கத்திற்கு மாறாக இம்மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் நாணயக் கொள்கையை இறுக்கமாக்கியது.
அக்டோபர் மாதம் நிகழக்கூடிய அடுத்தகட்ட மறுஆய்வின்போது இதேபோன்ற நடவடிக்கையை ஆணையம் எடுக்கக்கூடும்.

