அனுமதியற்ற கலப்புகளின் மூலம் தயாரான ஒன்பது உள்நாட்டுத் தயாரிப்பாளர்களின் 'குவே' உணவு', "பெஸ்ட் ஒன்" தயாரிப்பான வாழைப்பழச்சுவை கேக் மற்றும் 'பேக் கிங்ஸ்' தயாரிப்பான பழக்கலவை உணவுப் பொட்டலங்கள் போன்றவைத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நேற்று முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை குறிப்பிட்ட 'குவே' உணவு வகைகளைத் தயாரிக்க, விநியோகிக்க மற்றும் விற்பனை செய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு தடை விதித்துள்ளது.
இந்த குவே உணவுப்பொருட்களில் அனுமதித்ததைவிட அதிக அளவில் பென்சோயிக் அமிலம் மற்றும் சோர்பிக் அமிலங்கள் கலந்துள்ளன.
பேக் கிங்ஸ் தயாரிப்பான பழக்கலவை உணவுப் பொட்டலங்களில் ஒவ்வாமை தரக்கூடிய சல்ஃபர் டையாக்ஸைடு கலந்துள்ளதை அமைப்பு கண்டறிந்தது.
இவ்வாறு அதிக அளவில் இருக்கும் ரசாயனக் கலவையால் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் அரிப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அமைப்பு கூறியது.

