செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5c3f0515-6bd9-4335-932c-462c335ad73a
-

நான்கு பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 உயரும்

பெருந்தொற்றுப் பரவல் காலத்திற்கு முன்பிருந்த கட்ட ணங்களை நிலைநிறுத்தும் வகையில், நிலப் போக்குவரத்து ஆணையம் அடுத்த மாதம் முதல் நான்கு விரைவுச்சாலை பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணத்தை $1 உயர்த்து கிறது. ஜூரோங் நகர மண்டபத்தை அடுத்துள்ள நகரத்தை நோக்கிய ஆயர் ராஜா விரைவுச்சாலை, பிரேடல் சாலை மற்றும் தீவு விரைவுச் சாலையின் துணைச் சாலையை அடுத்துள்ள மத்திய விரைவுச்சாலை, டெஃபு மேம்பாலத்தை அடுத்துள்ள காலாங்-பாய லேபார் விரைவுச் சாலை (ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே) மற்றும் தீவு விரைவுச் சாலைக்கு அடுத்துள்ள மத்திய விரைவுச்சாலையில் மின்னி யல் சாலைக் கட்டண நுழைவுகளில் அடுத்த மாதம் 1 ஆம் தேதியிலிருந்து எட்டு குறிப்பிட்ட நேரங்களில் கட்டணம் உயருகிறது. விரைவுச்சாலைகளின் வெவ்வேறு வளைவு களில் அதிகரிக்கும் சாலை நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த மே மாதத்திற்குப் பிறகு தற்போது கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

உளவியல் கோளாற்றை ஏற்படுத்தும் கஞ்சா: அமைச்சர் எச்சரிக்கை

வீரியம் மிக்க கஞ்சா போதைப் பித்தையும் உளவியல் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள் காட்டி தேசிய வளர்ச்சி, உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் தமது ஃபேஸ்புக்கில் சில கருத்துகளைப் பதிவேற்றியுள்ளார். தாம் சந்தித்த இளையர்களிடம் கஞ்சா பற்றி தவறான கருத்து ஊட்டப்பட்டு இருந்தது தமக்குத் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, மேற்கத்திய ஊடகங்கள் இந்தப் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பெரிதும் ஊக்கமளிக்கும் கருத்துகளை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

"போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வுகளில் பங்கேற்றபோது போதைப்புழக்க அடிமைத்தனத்தில் இருந்த மீண்டோரைச் சந்தித்தேன். போதைப்பொருள் மூலம் சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாம் என தங்களுக்கு கற்பனைக்கு மிஞ்சிய வகையில் தொடக்கத்தில் சொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்," என்றார் துணைப் பேராசிரியர் பைஷல்.

அத்துடன், கடந்த திங்கட்கிழமை 'த லான்செட்' உளவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், போதைப்பித்தை கஞ்சா ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி செய்து அதில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த ஆய்வை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளுடன் இணைந்து 'யுகவ்' என்னும் நிறுவனம் நடத்தி யது. மார்ச் மாதம் 1,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்வாசி களிடம் கருத்து திரட்டப்பட்டு, அதன் முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன.

மோசடி தடுப்புப் பயிற்சியில் பல்வேறு துறை அதிகாரிகள்

பண மோசடிகளை எதிர்கொள்ள அளிக்கப்படும் 3 மாத காலப் பயிற்சிக்காக சட்ட அமலாக்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளனர்.

நீதித்துறை, காவல் துறை மற்றும் பிற துறைகளிலிருந்து 110 பங்கேற்பாளர்களைக் கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் மோசடிகளைக் களையும் தீர்வுகளை ஆராயும்.

மோசடிகள் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு, தற்போதைய மோசடி எதிர்ப்பு உத்திகளைப் பலப்படுத்துதல் மற்றும் மோசடியிலிருந்து மக்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் சட்ட அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற மூன்று முக்கிய விவகாரங்களில் இந்தக் குழு கவனம் செலுத்தும். டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் நீதிமன்றங்கள், தேசிய குற்றத் தடுப்பு ஆணை யம் ஆகியவற்றோடு இணைந்து மூன்றாவது முறையாக இந்தப் பயிற்சியை நடத்துகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோசடி குறுஞ்செய்தி மூலம் நூற்றுக்கணக்கான ஓசிபிசி வங்கி வாடிக்கை யாளர்கள் மொத்தமாக $13.7 மில்லியன் இழந்தனர். மேலும் கடந்த ஜூன் மாதம் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 60 பேர் $60,000க்கும் மேல் இழந்தனர்.