தீவு முழுவதும் உள்ள 20 சிறப்புக் கல்விக்கான பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் புதிய தொழிற்கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
படித்ததும் வேலையில் சேர மாணவர்களை ஆயத்தப்படுத்து
வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
புதிய பாடத்திட்டத்தின்கீழ், 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு பலதரப்பட்ட வேலைகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு கிட்டும்.
அதற்கேற்ற வகையில் பள்ளிக்கூடங்கள் புதிய பாடங்களைக் கற்பிப்பதில் முக்கியத்துவம் காட்டும்.
பொதுவான வேலைவாய்ப்புகளோடு வீட்டிலிருந்து வேலை செய்தல், சுயதொழில் புரிதல் போன்ற ஏற்பாடுகள் தொடர்பான விரிவான அம்சங்களில் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதில் பள்ளிக்கூடங்கள் கவனம் செலுத்தும்.
பொலிவூட்டப்பட்ட புதிய பாடத்திட்டத்தை இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் நேற்று ரெயின்போ சென்டர் ஈசூன் பார்க் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் உரையாற்றுகையில், ஒவ்வொரு மாணவரும், அவரின் சிறப்புத் தேவைக்கான அளவு எந்த நிலையில் உள்ளது என்பதற்கும் அப்பால் தங்களது சொந்த வழியில் சமூகத்திற்குப் பங்களிக்க முடியும் என்றார்.
வேலை என்பது பொருளியல் மதிப்பின் ஒரு நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தரப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான்.
இருப்பினும் பலர் அவர்களின் வேலைக்கான ஊதியத்தைப் பெறுவதில்லை.
நமது புதிய பாடத்திட்டம் பல்வேறு வடிவத்தில் வேலைகளை உருவாக்கும். நமது மாணவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புக்கு நாம் அங்கீகாரம் வழங்க வேண்டும். பொதுவான வேலையை வசதிக்கேற்றதாக மாற்றி அமைக்கவும் வேலையிடத்தில் செய்ய வேண்டிய வேலையை வீட்டில் இருந்து செய்யவும் தொண்டூழியம் புரியவும் மாணவர்களால் முடியும் என்பதற்கான அங்கீகாரம் அது.

