பெருந்தொற்றுப் பரவல் காலத்திலும் உச்சம் தொட்ட கார் விற்பனையைத் தொடர்ந்து, பிரிட்டனின் சொகுசு கார் உற்பத்தியாளரான 'பிஎம்டபிள்யு' தனது 'ரோல்ஸ் ராய்ஸ்' கார்களின் விலையை மேலும் உயர்த்த உள்ளது.
அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பதற்காக, ஒருபோதும் விலையைக் குறைக்கமாட்டோம், என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டார்ஸ்டென் முல்லர் ஒட்வோஸ் தெரிவித்தார்.
கொவிட்-19 காலகட்டத்திலும் கடந்த ஆண்டு சாதனையாக 5,586 கார்களுடன் விற்பனை 49 விழுக்காடு அதிகரித்தது என்றும் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.
சராசரியாக $705,000 விலையுள்ள ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார், தற்போது சிங்கப்பூரில் $1 மில்லியனிலிருந்து $2 மில்லியன் வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு சாதனை அளவாக 90 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனையாகின.
இந்த நிறுவனத்தின் 6 புது ரக கார்களில், 2023 ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள மின்கலத்தால் இயங்கக்கூடிய 'ஸ்பெக்டர்' ரக காரும் அடங்கும்.
சிங்கப்பூரில் இந்த காரை வாங்குவதற்காக $100,000 முன் தொகையுடன் 20 பேர் முன்பதிவு செய்து ள்ளனர். மின்வாகனத் தயாரிப்பைத் தொடர்ந்து, உயர்தர 12-சிலிண்டர் ரக கார்கள் 2030ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்றும் முல்லர் ஒட்வோஸ் கூறினார்.