ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஸ்கேப் கட்டடம் வெவ்வேறு வயதில் உள்ள இளையர்களை ஈர்க்கும் வகையில் மேம்பாடு காண உள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய இடவசதிகளோடு புதிய அம்சங்களும் இந்தக் கட்டடத்தில் இடம்பெறும் என்று ஸ்கேப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அப்போது, இளையர்களின் புத்தாக்கத்திறன் மற்றும் படைப்புத்
திறனை வளர்க்க அங்கு வாய்ப்பு இருக்கும். 2007ஆம் ஆண்டு லாப நோக்கமற்ற அமைப்பாக 2007ஆம் ஆண்டு ஸ்கேப் தொடங்கப்பட்டது.
நடன வகுப்புகள், எழுத்துத் திறன் பயிலரங்குகள் போன்ற புதிய திறன்களை இளையர்கள் இங்கு கற்கிறார்கள். இதனை மேம்படுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் புதுப்பிப்புக்கான அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டது.
மாறிவரும் இளையர்களின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் நோக்கில் பயிற்சித் திட்டங்களை மாற்ற இருப்பதாகவும் புதிய பங்காளித்துவம் செய்துகொள்ள இருப்பதாகவும் அது அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. மின்னிலக்கம், தொழில்நுட்பம், படைப்பாற்றல் போன்றவற்றில் மேம்பாடு செய்வதில் ஸ்கேப் கவனம் செலுத்தும்.
தற்போது ஐந்து தளங்களைக் கொண்ட ஸ்கேப் கட்டடம், ஒருங்கிணைந்த பல வாய்ப்புகளைப் பெறும் வகையில் மூன்று பிரிவு களாக மாற்றப்படும்.
இளம் தொழில்முனைவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஒரு பிரிவும் பல்வேறு கலை அம்சங்களில் இளையர்கள் படைப்புத் திறனை வளர்க்கும் மற்றொரு பிரிவும் இங்கு அமைக்கப்படும்.
ஓராண்டு காலத்திற்கு மேல் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்றாலும் சில நிகழ்ச்சிகளை ஸ்கேப் தொடர்ந்து நடத்தும். அதில் ஒன்று அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய இளையர் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி.

