சக்கர நாற்காலியில் வந்த ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக 72 வயது முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று மூன்று வாரச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தாக்கப்பட்ட அந்த ஆடவர் பெருமூளை வாத நோய் பாதிப்புக்கு ஆளானவர். இருவருக்கும் நடந்த வாய்த்தகராற்றின்போது கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த முதியவர், சக்கர நாற்காலியில் வந்த ஜூரைமி மீது ஓங்கி ஒரு குத்துவிட்டார். அதைத் தாங்க முடியாத சக்கர நாற்காலியில் வந்தவர் சற்று நேரம் அப்படியே மயங்கிவிட்டார். இந்தச் சம்பவத்தில் சக்கர நாற்காலியில் வந்த 48 வயது ஆடவர் ஜுரைமி ஜஃபாருக்கு மூக்கு உடைந்தது.
ஜூலை 26ஆம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில் 72 வயது அப்துல் ரஹ்மான் முகமது ஹனாஃபியா, தன் மீது சுமத்தப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டார். அதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதித்தது.
பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஆடவரை, அவரது தாயார் கவனித்து வருகிறார்.
தாக்கிய அப்துல் ரஹ்மானும் அந்த வீட்டில் வசித்து வந்தார். ஜூரைமியின் தாயார், அப்துல் ரஹ்மானின் வளர்ப்புச் சகோதரி ஆவார்.
ஜூரைமி, தனது சொந்த வீட்டுக்குச் சென்று கடிதங்கள் ஏதும் வந்துள்ளனவா என்று பார்ப்பது வழக்கம்.
அவ்வாறு கடந்த மார்ச் 3ஆம் தேதி மாலை 6.30 மணிக்குச் சென்றிருந்தார்.
அப்போது அங்கு அப்துல் ரஹ்மான், ஜூரைமியைப் பார்த்து, அனைத்துப் பொருள்களையும் எடுத்துச்செல்லும்படி கத்தினார்.
அதன்பின் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தின்போது ஆத்திரம் அடைந்த அப்துல் ரஹ்மான், ஜூரைமியைத் தாக்கியதாகத் தெரிகிறது.

