முன்னாள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்குப் பரிசோதனை செய்து கல்லீரல் அழற்சி தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு திட்டங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
போதைப் புழக்கத்தால் கல்லீரல் அழற்சி நோய்க்கு ஆளாகி ஆபத்தை எதிர்நோக்கும் முன்னாள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அது குறித்து விளக்கி, சோதித்து சிகிச்சையளிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் டான் டோக் செங் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவர். அவர்களுக்கு மானியத்துடனான சிகிச்சை அளிக்கப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளில் 30 முதல் 40 விழுக்காட்டினர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதாக டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் இயூ குவோ சாவ் கூறினார்.
ஒப்புநோக்க கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள் 0.2 விழுக்காட்டினர் மட்டுமே என்கிறது தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையின் இணையத்தளம். இந்தப் புதிய திட்டத்தின் முதல் கட்டமாக 65 போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கல்லீரல் குறித்த அறிவைப் போதிப்பதுடன், பரிசோதித்து சிகிச்சையும் அளிக்கப்படும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு மத்தியில் 200க்கும் மேல் அதிகரிக்கப்படும். சிங்கப்பூரில் முதன்முதுலாக இதுபோன்ற குழுவினரிடையே கல்லீரல் அழற்சி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெப்படைட்டிஸ் சி என்னும் நோய் இரத்தம் வாயிலாகவும் உடலின் வெளிப்படும் திரவம் வழியாகவும் பரவக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அது அவர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி நுரையீரல் புற்றுநோய் உருவாக வழிவகுத்துவிடும் என்கிறது ஆய்வு.

