இரு வெளிநாட்டு ஊழியர்களை அவதூறாகப் பேசிவிட்டு அது அவரது 'அரசியலமைப்பு உரிமை' என்று கூறிய ஆடவருக்கு ஒரு வாரம் சிறையும், $1,000 அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் திரு லீ போ கியன் என்பவருக்கு இன்று (ஜூலை 28) அந்த தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி தோ பாயோ வட்டரத்தில் திரு ரத்தினசிங்கம் ஜதீசன், திரு கிருஷ்ணன் கார்த்திகேயன் ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது அவ்விருவரும் தோ பாயோ லோரொங் 5ல் ஒரு இணைப்புப்பாதை கட்டுவதற்குத் தேவையான கட்டுமான அளவுகளை எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் அவர்கள் இருவரும் ஒரு பொது இடத்தில் ஒதுங்கினர். அங்கே இருந்த திரு லீ அவர்களைத் தாறுமாறாகத் திட்டியுள்ளார். இன, சமயம் சார்ந்த அம்சங்களைக் கொண்டு அவ்விரு வெளிநாட்டு ஊழியர்களை திரு லீ திட்டியுள்ளார்.
அதோடு திரு லீ அப்போது அவரது மூக்கு, வாய் மேல் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.
திரு லீ திட்டியதைத் திரு ரத்தினசிங்கம் தமது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்திருந்தார்.
அதில் ஒரு கட்டத்தில் " நீங்கள் எங்கள் நாட்டுக்குள் நுழைந்தது தவறு.. இது சட்டவிரோதமானது. உங்களை வெளியேற்றுவோம்," என்று கூறியுள்ளார். சிங்கப்பூருக்கு அவர்களைப் பிடிக்கவில்ல என்றும் அவர்கள் மிகவும் தூரமாகச் செல்லவேண்டும் என்றும் திட்டியதாவும் திரு லீ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவத்திற்கு முன்னால் திரு லீயை திரு ரத்தினசிங்கமும் திரு கிருஷ்ணனுன் சந்தித்ததே இல்லை. திரு லீ அவர்களை அவதூறாகப் பேசியபோதும் அவ்விருவரும் எந்த தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.

