பண்டிகை காலத்தில் புதிய நோட்டுகளுக்கான தேவையைக் குறைக்க மின்பட்டுவாடா
சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது கரிமக் கழிவுகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்கத்தில் மேலும் ஒரு முயற்சியை நடைமுறைப்படுத்துகிறது.
சீனப் புத்தாண்டு போன்ற விழாக் காலத்தின்போது புதிதாக வெளியிடப்படும் நாணய நோட்டுகளுக்கும் காசுகளுக்கும் நிலவும் தேவையைக் குறைக்கும் நோக்கத்துடன் மின் பட்டுவாடாவை மேம்படுத்தும் முயற்சிகளை அது தீவிரப்படுத்துகிறது.
ஒவ்வோர் ஆண்டும் விழாக் கால தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளியிடப்படும் கூடுதல் நாணய நோட்டுகளால் ஏற்படக்கூடிய கரிமக் கழிவுகள் இந்த ஆணையத்தின் மொத்த கரிமக் கழிவில் ஏறத்தாழ 8% ஆகும்.
இது, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 430 நாலறை வீடுகள் பயன்படுத்தும் வருடாந்திர மின்சாரம் மூலம் உருவாகக்கூடிய கரிமக் கழிவுக்குச் சமமானது என்று ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் விளக்கினார்.
சிங்கப்பூரின் மத்திய வங்கியான இந்த ஆணையத்தின் சுற்றுச்சூழல் அறிக்கையைப் பற்றி ஊடகத்திற்கு விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
விழாக் காலங்களில் புதிய நாணய நோட்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய கரிமக் கழிவுகளைக் குறைத்துக்கொள்ளும் வகையில் மாற்று ஏற்பாடுகளுக்கு மேலும் அதிக சிங்கப்பூரர்கள் மாறிக்கொள்வார்கள் என்று திரு மேனன் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய நாணய நோட்டுகளை வெளியிடுவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்துக்கொள்ளும் வகையில் கட்டம் கட்டமாக புதிய நோட்டுகளை ஆணையம் தொடர்ந்து குறைத்துக் கொள்ளும் என அறிக்கை கூறியது.
நாணயங்களை தயாரிக்கும்போது ஏற்படக்கூடிய கரிமக் கழிவைக் குறைக்க ஆணையம், அதன் ஒப்பந்த நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 2021 நிதி ஆண்டில் ஆணையத்தின் மொத்த கரிமக் கழிவில் பாதிக்கும் மேற்பட்டவை, ஆணையத்தின் ஒப்பந்த நிறுவனங்களால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
'நோட் பிரிண்டிங் ஆஸ்திரேலியா' என்ற தனது நாணய நோட்டு அச்சீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு ஆணையம் கரிமக் கழிவைக் குறைத்து வருகிறது.
அந்நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது.
இந்த முயற்சிகள் எல்லாம் விழாகாலங்களின்போது புதிய நாணய நோட்டுகளை ஆணையம் வெளியிடாமல் இருக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்திற்கு வழிகோலும் என்றது அறிக்கை.
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டிற்காகவும் இதர பண்டிகைக் காலங்களிலும் ஆண்டுக்கு ஏறக்குறைய 100 மில்லியன் நாணய நோட்டுகளை ஆணையம் வெளியிடுகிறது.
அத்தகைய புதிய நோட்டுகள் அன்பளிப்பு கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கூடிய விரைவிலேயே ஆணையத்திற்கே திரும்பிவிடும்.
அப்படி திரும்பும் நோட்டுகளில் பெரும்பாலானவை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் புழக்கத்தில் விடப்படுகின்றன.
இருந்தாலும் பெரும்பாலான நோட்டுகள் அளவுக்கு அதிகமாக தேங்கிவிடும். தேவைக்கு அதிகமாக இருக்கக்கூடிய அந்த அளவுக்கு அதிக நோட்டுகள், அவற்றின் பயனீட்டு ஆயுளுக்கு முன்பாகவே அழிக்கப்பட்டுவிடும்.

