சுற்றுப்புற, சமூக ஆளுமைத் (இஎஸ்ஜி) தரங்களை நிறைவேற்றுகின்ற சில்லறை முதலீட்டு நிறுவனங்கள் நிதி வசதியைப் பெற இனிமேல் புதிய வழிகாட்டி நெறிமுறையைப் பின்பற்ற வேண்டி இருக்கும்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அந்த நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, அத்தகைய நிறுவனங்கள் தாங்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு ஆதரவான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த, பருவநிலையால் பாதிக்கப்படாத நிதித் துறையை சிங்கப்பூர் எப்படி பலப்படுத்த முடியும் என்பதன் தொடர்பிலான தனது இரண்டாவது வருடாந்திர அறிக்கையை இந்த ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் இந்தப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இந்த நெறிமுறைகள் 2023 ஜனவரியில் நடப்புக்கு வரும்.
சில்லறை முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும் இஎஸ்ஜி நிதி பற்றி நன்கு தெரிந்துகொள்ள இந்த வழிகாட்டி நெறிமுறைகள் உதவும்.
பசுமைத்திட்ட மோசடி ஆபத்துகளை அவை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், வருடாந்திர ஆண்டு அறிக்கையை பற்றி விளக்கியபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

