சிங்கப்பூரில் தேசிய சேவையின் 55வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் நாணய ஆலை வெள்ளிப் பதக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அந்தப் பதக்கத்தில் ஐந்து சேவைகளைச் சேர்ந்த ராணுவச் சேவையாளர்கள் சீருடையில் காணப்படுகிறார்கள்.
சிங்கப்பூரின் நாட்டு உருவாக்கப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லை அந்தப் பதக்கம் நினைவுகூறும்.
கடந்தகால, இப்போதைய தேசிய சேவையாளர்கள் ஆற்றும் தொண்டையும் அது ஆவணப் படுத்தும் என்று இந்த ஆலை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
20 கிராம் எடையுடன் 999 தரத்திலான அந்த வெள்ளி பதக்கங்கள், ஐந்து சேவைகளைப் பெருமை படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.
சிங்கப்பூர் ராணுவம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் காவல் துறை ஆகியவை அந்த ஐந்து படைகள்.
அந்த ஐந்து படைகளும் மொத்தமாக சிங்கப்பூரின் தற்காப்பிற்கு மூலாதாரமாகத் திகழ்கின்றன. நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றன என்று சிங்கப்பூர் ஆலை தெரிவித்து இருக்கிறது.
பதக்கத்தின் மறுபக்கத்தில் என்எஸ்55 சின்னம் இருக்கிறது. 1967 முதல் 2022 வரை முத்திரையும் அதில் இருக்கிறது. இது தேசிய சேவையின் 55 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
அந்தப் பதக்கம் சிங்கப்பூர் நாணய ஆலை சில்லறை வர்த்தகக் கடைகளில் ஆகஸ்ட் 20 முதல் விற்பனைக்கு கிடைக்கும். $80 செலுத்தி முன்பதிவு செய்யலாம். கடந்தகால, நிகழ்கால தேசிய சேவையாளர்கள், முழுநேர உள்துறைக் குழு சீருடை அதிகாரிகள், முழுநேர தற்காப்பு/ ஆயுதப் படை சேவையாளர்கள் $70க்கு அதை வாங்கலாம்.
LIFESG கைப்பேசிச் செயலி யைப் பயன்படுத்தி $55க்கு அவர்கள் பதக்கத்தை வாங்கலாம்.

