சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுகின்ற தொழில்துறை மற்றும் சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் அறப்பணி நிதியமைப்பு 'இஸ்கோஸ் ரீஜென் ஃபண்ட்' என்று குறிப்பிடப்பட்டது.
அது இப்போது சீரமைக்கப்பட்டு அதற்குப் புதிதாக 'நியூஜென் ஃபண்ட்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளான சிறாருக்கு சீரமைக்கப்பட்ட நிதி மூலம் மேலும் ஆதரவு கிடைக்கும்.
இலவச பாட வகுப்பு, மதியுரை ஆலோசனை, கலைப் பயிற்சி, குடும்பப் பிணைப்பு பயிற்சி உள்ளிட்ட மேலும் பல செயல்திட்டங்களும் நடப்புக்கு வரும்.
விவோசிட்டியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அந்த அறப்பணி அமைப்பு புதிய பெயரையும் புதிய செயல்திட்டங்களையும் பற்றி அறிவித்தது.
நிதி அமைப்பு சீரமைக்கப்பட்டு இருப்பதையடுத்து உதவி தேவைப்படும் மேலும் அதிக சிறார்களை எட்ட முடியும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொவிட்-19க்குப் பிந்திய உலகில் ஏற்படக்கூடிய சவால்களைக் கையாள தோதாக அந்த அறப்பணி அமைப்பு சென்ற ஆண்டில் தனது உத்தியை மறுபரிசீலனை செய்தது. அதன் விளைவாக நிதியமைப்பு சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மற்ற சிறாருடன் ஒப்பிடுகையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படும் பெற்றோரின் பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தேசிய சமூக சேவை மன்றமும் 2020 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது.

