அடுத்த பாரம்பரிய பெருந்திட்டம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துகளை கழகம் நாடுகிறது
சிங்கப்பூரின் அடுத்த பாரம்பரிய பெருந்திட்டத்தில் பல யோசனைகள், எண்ணங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்படுகின்றன.
ஆர்மீனியன் ஸ்திரீட்டில் கைவினைப் பொருள் நிலையம், சிங்கப்பூரின் வரலாற்றை வெளிநாடுகளில் மேம்படுத்த நிதி, உள்ளூர் வடிவமைப்புகளின் தேசிய தொகுப்பு முதலானவை அத்தகைய யோசனைகளில் உள்ளடங்கும்.
அத்தகைய யோசனைகள், எண்ணங்கள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் நவம்பர் 30ஆம் தேதி முதல் தேசிய மரபுடைமைக் கழகத்திடம் தாங்களே நேரடியாக தெரியப்படுத்தலாம்.
இந்தக் கழகம் இப்போது 'அவர்எஸ்ஜி' மரபுடைமைத் திட்டம் 2.0 என்ற ஓர் ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் செயல்பட்டு வருகிறது.
அரும்பொருளகங்கள், மரபுடைமைத் துறைக்கான இந்தத் திட்டம் 2023ல் தொடங்கப்படும்.
கழகம் சென்ற ஆண்டு தொடக்கத்தில் இருந்தே 650க்கும் மேற்பட்ட பங்காளிகள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலரையும் 50க்கும் மேற்பட்ட குழு விவாதங்களில் ஈடுபடுத்தி இருக்கிறது.
அந்த விவாதங்களில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு யோசனை களையும் கருத்துகளையும் ஒன்றுபடுத்தி புதிய ஐந்தாண்டு திட்டத்துக்கு வடிவம் கொடுக்கிறார்கள்.
அந்தத் திட்டம் நான்கு துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமூகம், அடையாளம், தொழில்துறை, புத்தாக்கம் ஆகியவை அந்த நான்கு துறைகள்.
சமூகத்தைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு அதிக வாய்ப்புகளை அளித்து அவர்களுடன் சேர்ந்து செயல்திட்டங்களை, நிகழ்ச்சி அம்சங்களை உருவாக்கலாம் என்று கழகம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இளையர்கள் புதிய நடைமுறைகளைக் கைக்கொள்ள ஊக்கமூட்டப்படுவார்கள். கலாசார நடைமுறைகளைக் கட்டிக்காப்பதில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பாரம்பரிய வியாபாரங்களை ஆவணப்படுத்துவதிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
தொழில்துறையைப் பொறுத்தவரை கழகம் ஆர்மீனியன் ஸ்திரீட்டில் கைவினைப் பொருள்கள், புத்தாக்கப் பொருள்களுக்கான நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
புத்தாக்கத்தைப் பொறுத்தவரை தேசிய நினைவுச் சின்ன உரிமையாளர்களுக்கு மேலும் உதவிகளை வழங்கி அவர்கள் தங்கள் சொத்துகளை நிலையாக காத்து வர வகை செய்வது பற்றி கழகம் ஆராய்கிறது.
பொதுமக்கள் இந்தச் செயல்திட்டங்கள் பற்றி இணையவாசலில் பலவற்றையும் தெரிந்துகொள்ளலாம். தங்கள் கருத்துகளைப் பரஸ்பரமாக பரிமாறிக் கொள்ளலாம்.
ஐந்து இடங்களில் அமைந்திருக்கும் கூடங்களிலும் அவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம்.
இதனிடையே, மரபுடைமைத் திட்டம் 2.0 பற்றி கருத்து கூறிய இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் திருமதி மரியா பவானி தாஸ், நம் மரபுடைமைக் கதைகளையும் அனுபவங்களையும் சிங்கப்பூர் அளவில் மட்டுமின்றி உலகளவில் பகிர்ந்து கொள்ள புதிய திட்டம் உதவும் என்றார்.
அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் மரபுடைமைப் பெருந்திட்டத்தின்கீழ் இந்திய சமூகத்திற்கே உரித்தான மரபுடைமை அம்சங்களான பூக்கட்டுதல், உணவுப் பொருள்கள், சமையல் முறைகள் போன்ற கலைகளைப் பேணிக்காக்கவும் அவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் இந்திய மரபுடைமை நிலையம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கூடுதல் செய்தி:
பொன்மணி உதயகுமார்

