வழக்கறிஞர் எம். ரவிக்கு எதிரான தவறான நடத்தை குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அரசுத் தரப்பின் நடத்தை பற்றி வழக்கறிஞர் ரவி தெரிவித்த கருத்துகள் நியாயமான விமர்சனம் தான் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கறிஞர் ரவிக்கு எதிரான தவறான நடத்தை குற்றச்சாட்டை ஒழுங்குமுறை கண்காணிப்பு மன்றம் தள்ளுபடி செய்த முடிவை தான் உறுதிப்படுத்தியது ஏன் என்று நீதிபதி சீ கீ ஊன் எழுத்து மூலமாக விளக்கினார். கண்காணிப்பு மன்ற முடிவை ஆட்சேபித்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் செய்த மனுவை கடந்த மே மாதம் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தலைமைச் சட்ட அலுவலகம் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்திடம் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதனையடுத்து திரு ரவிக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் ஒரு குற்றச்சாட்டு தவறான நடத்தை பற்றியதாக இருந்தது.
இதர மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் திரு ரவி குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார். $6,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் செலவுத் தொகையாக $3,000 செலுத்த வேண்டுமென கண்கா காணிப்பு மன்றம் அவருக்கு உத்தரவிட்டது. திரு ரவி சென்ற ஆண்டு டிசம்பரில் வழக்காடும் தொழிலை நிறுத்திக்கொண்டார்.
மலேசியாவை சேர்ந்த கோபி ஆவடியான் என்பவர் 2014ல் 40.22 கிராம் ஹெராயின் இருந்த இரண்டு பொட்டலங்களுடன் பிடிபட்டார்.
அந்த வழக்கின் தொடர்பில்தான் ரவிக்கு எதிரான புகார்கள் தாக்கலாயின.
கோபி 2017ல் மரண தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டார். ஆனால் 2018 மரண தண்டனை விதிக்கக்கூடிய முதல் குற்றச்சாட்டின் பேரில் உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. 2020ல் கோபி உச்ச நீதி மன்றத்துக்கு மனு செய்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டு மரண தண்டனையில் இருந்து தப்பினார்.
இந்த முடிவு வெளியான பிறகு அந்தத் தீர்ப்பு பற்றியும் அரசுத் தரப்புக்கு எதிராகவும் ரவி பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

