சித்தி சலிஹா முகம்மது ஹாசன், 30, என்ற மாது, இணையத்தில் இருந்து பல தகவல்களை, படங்களைப் பெற்று அவற்றில் திருத்தங்கள், தில்லுமுல்லுகளைச் செய்து, அவற்றைத் தாக்கல் செய்து பயணக் காப்புறுதி நிறு வனங்களிடம் இருந்து $14,000க் கும் மேற்பட்ட தொகையைச் சட்டவிரோதமாகப் பெற்றார்.
ஏமாற்றியது தொடர்பிலான ஆறு குற்றங்களை அவர் நேற்று ஒப்புக்கொண்டார். இதர 14 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கடந்த 2016 மார்ச் மாதத்திற்கும் 2019 செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் அவர் மொத்தம் 20 முறை சட்டவிரோத கோரிக்கைகளை விடுத்தார்.
அவற்றில் 17 கோரிக்கைகள் பேரில் அவருக்குப் பணம் கொடுக்கப்பட்டது. மாதுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அந்த மாது செப்டம்பரில் அனுபவிக்கத் தொடங்குவார்.
இத்தகைய ஏமாற்று காரியங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்க முடியும்.

