$500,000 பண மோசடிகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

$500,000 பண மோசடிகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
167e9a8c-701e-414f-a352-f878fa243531
-

சட்டவிரோத பண மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப் படும் மூன்று பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த மோசடிகளில் சிக்கிய அப்பாவிகள் $500,000க்கும் மேற்பட்ட தொகையை இழந்துவிட்டனர்.

முகம்மது ஷஃப்பி ஜாஸ்னி முகம்மது அட்னான், 19, அலோசி யஸ் கோங் ஜியா ஜி, 22, ஆகியோரும் பெயர் குறிப்பிட முடியாத 17 வயது இளையரும் அந்த மூவரில் அடங்குவர்.

அந்த மூவரும் டெலிகிராம் செயலியில் இடம்பெற்ற குறுஞ்செய்திகளின் பேரில் செயல்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னாரென்று தெரியாதவர்களிடம் அவர்கள் தங்கள் சிங்பாஸ் விவரங்களைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த சிங்பாஸ் விவரங்களைப் பயன்படுத்தி பிறகு இணையத்தில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

பல்வேறு மோசடிகளில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கையாளுவதற்காக அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் எட்டு பேர் அந்த மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 500,000க்கும் மேற்பட்ட தொகை பறிபோய் இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மூவருக்கும் தலா $200 முதல் $2,000 வரை கிடைக்கும் என்று அவர்களிடம் உறுதி கூறப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

குற்றம் சுமத்தப்பட்ட மூவரில் ஒருவரான 17 வயது இளைஞர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

ஷஃப்பி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கோங், கணினி தவறான பயனீட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். இந்த மூவரின் வழக்குகள் அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.