இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தொழில்துறை மின்னஞ்சல் மோசடிகளில் சிக்கி கிட்டத்தட்ட 93 பேர் குறைந்தபட்சம் $56.2 மில்லியன் தொகையை இழந்து இருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு முழுவதும் அரங்கேற்றப்பட்ட அனைத்து வகை மோசடிகளிலும் $633.3 மில்லியன் பறிபோனது.
அதில் தொழில்துறை மின்னஞ்சல் மோசடிகளில் இழந்த தொகை கிட்டத்தட்ட 10 விழுக்காடாகும்.
அப்பாவி ஒருவரின் சகாக்கள், தொழில் பங்காளிகள் அல்லது பொருள், சேவை விநியோகிப்பாளர்களிடம் இருந்து வருவது போல மோசடிப் பேர்வழிகள் மின்னஞ்சல்களை அனுப்புவார்கள்.
நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அத்தகைய மோசடி மின்னஞ்சல்கள் தெரிவிக்கும்.
அது தெரியாமல் அப்பாவிகள் அத்தகைய மோசடிகளுக்கு இலக்காகி அனுப்பக்கூடாத வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி கடைசியில் பணத்தை இழந்துவிடுவார்கள்.
இதனிடையே, தனது மோசடி தடுப்பு நிலையம், டிபிஎஸ் வங்கியுடன் சேர்ந்து செயல்பட்டு US$10 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மீட்டு இருக்கிறது என்று காவல்துறை தெரிவித்தது.
அந்தத் தொகையை அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் ஒருவர் இழந்து இருந்தார்.
மோசடியைக் கண்டுபிடித்து பணத்தை மீட்க டிபிஎஸ் மோசடி தடுப்புக் குழு மேற்கொண்ட முயற்சிகளுக்காக நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்தக் குழுவுக்கு சிங்கப்பூர் காவல்துறை சமூக பங்காளித்துவ விருது வழங்கி சிறப்பித்தது.

