மக்கள் செயல் கட்சி(மசெக) தொகுதியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சி தொகுதியாக இருந்தாலும் சரி மக்கள் எங்கு வசித்தாலும் அவர்கள் அனைவருக்கும் சேவையாற்ற அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புதிய ரிவர்வேல் சமூக மன்றத்தைத் திறந்து வைத்து திரு லீ உரையாற்றினார்.
பழைய ரிவர்வேல் சமூக மன்றம் வீடமைப்பு வளர்ச்சிக் கழக காலித்தளத்தில் அமைந்திருந்தது.
அந்த வட்டார மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அது பெரிதாக இல்லை.
பல்வேறு வசதிகளுடன் புதிய சமூக மன்றத்தை அமைப்பதற்கான திட்டங்கள் 2016ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன.
அவை பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளுடன் செயல்படுத்தப்பட்டன.
அப்போது செங்காங் ஈஸ்ட், மசெக நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
பிறகு 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியை எதிர்த்தரப்பு பிடித்தபோது அத்தொகுதி அதன் வசமானது.
இருந்தாலும் செங்காங்கில் வசிக்கும் மக்களுக்குச் சேவையாற்றுவது என்று அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே, அதிக மக்களின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதிய சமூக மன்றத்தை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்தன.
அந்தச் சமூக மன்றம் அமைந்திருக்கும் பகுதி பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியின் ஓர் அங்கமாக இருந்தது.
அதற்குப் பிறகு அது செங்காங் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டது.
செங்காங் ஈஸ்ட் மசெக தொகுதியாக அல்லது எதிர்த்தரப்பு தொகுதியாக எப்படி இருந்தாலும் பல சேவையாளர்களும் தொண்டூழியர்களும் சமூக மன்ற நிர்வாகக் குழுவிலும் அதன் துணைக் குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெற்று குடிமக்களுக்குப் பல்வேறு செயல் திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்து உதவுகிறார்கள் என்றார் திரு லீ.
புதிதாக திறக்கப்பட்ட ரிவர்வேல் சமூக மன்றம் ரிவர்வேல் பிளாசாவுக்கு அருகில் அமைந்துள்ளது.

