செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2eb11055-5e80-4aa8-a59a-45208ef23db4
-

படப்புத்தகம் எழுதி விற்று $3,600 பெற்று கொடை தந்த சிறுமி

சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் தொடக்கநிலை 3ல் படிக்கும் ரெபக்கா வோங் என்ற ஒன்பது வயதுச் சிறுமி (படம்) வசதி குறைந்த மாணவர் களுக்கு உதவ வேண்டும் என்று விரும்பினார். அதற்காக சென்ற டிசம்பரில் படப்புத்தகம் ஒன்றை எழுதி தயாரித்தார்.

அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடத்திலும் மொத்தம் 121 புத்தகங்களை விற்று $3,600 பெற்று அதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு வழங்கினார். அந்த நிதி, குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுகிறது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக சமய மாநாடு: அதிபர், துணைப் பிரதமர் உரை

எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளி ஏற்பாட்டில் வரும் செப்டம்பரில் உலகளாவிய அனைத்துச் சமய மாநாடு, இங்கு ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கும்.

அதிபர் ஹலிமா யாக்கோப், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இருவரும் அந்த மாநாட்டில் உரையாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அனைத்துலக பிணைப்புமிக்க சமூகங்கள் மாநாடு' என அந்த மாநாடு குறிப்பிடப்படுகிறது. எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளி, முதல் முறையாக அந்த மாநாட்டை 2019ஆம் ஆண்டில் நடத்தியது.

மாநாட்டில் உலகம் முழுவதையும் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், சமூகத்தினர், கல்வித்துறையினர், சமயத் துறையினர் எல்லாரும் கலந்துகொண்டு தங்கள் சமூகங்கள் சந்திக்கும் முக்கியமான சவால்களைப் பற்றியும் அவற்றைச் சமாளிக்க தாங்கள் கைக்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்தும் விவாதிப்பார்கள்.