வீடுகளில் நண்பர்கள், குடும்பத்தாருடன் விளையாடும் மாஜோங், போக்கர் போன்ற சமூக சூதாட்டங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் நடப்புக்கு வருகின்றன.
அத்தகைய சூதாட்டங்கள் இப்போது சட்டவிரோதமானவை அல்ல.
இருந்தாலும் அவை பற்றி இப்போதைய சட்டங்களில் தெள்ளத்
தெளிவான வரைமுறைகள் இல்லை. எவை எவை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கான தெள்ளத்தெளிவான அளவீடுகளும் நெறிமுறைகளும் புதிய சட்டங்களில் இடம்பெற்று உள்ளன.
'சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம்' என்ற அந்தப் புதிய சட்டத்தின்கீழ் இதர பல மாற்றங்களும் அமலாகும். 21 வயதுக்கும் குறைந்தவர்கள் சூதாடுவது குற்றம் என்று புதிய சட்டம் தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் சூதாட்ட நடை
முறைகளை மேற்பார்வையிடுவதற்கான புதிய விதிமுறைகளும் புதிய ஒழுங்குமுறை ஆணையமும் இன்று முதல் நடப்புக்கு வருவதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் புதிதாக கடந்த மார்ச் மாதம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து இந்த மாற்றங்கள் நடப்புக்கு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய உறுப்
பினர்கள், மின்னிலக்கத் தொழில்நுட்பம் காரணமாக புதுப்புது வடிவிலான சூதாட்டங்கள் தலை
யெடுப்பது பற்றி கவலை தெரிவித்து இருந்தார்கள்.
புதிதாக அமையவிருக்கும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம், இப்போதைய 'சூதாட்டக்கூட ஒழுங்குமுறை ஆணையத்தின்' பணிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும்.
அத்துடன், சிங்கப்பூரில் எல்லா வகையான சூதாட்டங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாக புதிய ஆணையத்துக்கு மேலும் பல அதிகாரங்கள் இருக்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய சூதாட்ட பிரச்சினைத் தீர்வு மன்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய சமூக பாதிப்புகளை ஆணையம் குறைக்கும்.
அதேவேளையில், காவல்துறை தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை எடுத்து வரும். இந்த நட
வடிக்கைகள் காரணமாக சூதாட்டப் போக்குகளும் தொழில்நுட்பப் போக்குகளும் எப்படியெல்லாம் தலைதூக்குகின்றன என்பதை அரசு நன்கு தெரிந்துகொள்ளும்.
சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ், குடும்பத்தாரும் நண்பர்களும் நேரடியாகச் சமூக சூதாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல் அல்ல. அதற்கு வயது வரம்பும் இல்லை.
ஆனால், அத்தகைய சூதாட்டங்கள் ஒருவரின் வீட்டில் நடக்கவேண்டும். எந்தவொரு தொழிலாகவும் அதை நடத்த முடியாது.
இருந்தாலும் இணையம் மூல மான சமூக சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பிட்ட வயதை எட்டாதவர்கள் சூதாடுவது அல்லது சூதாட்ட இடங்களுக்குச் செல்வது ஒரு குற்றமாகும்.
ஆனாலும் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் நிலையங்கள் போன்ற நுழைவுப் பரிசோதனை தேவைப்படாத இடங்கள் இதற்கு விதிவிலக்கு பெறும்.
புதிய சட்டங்களின்படி தனியார் நிறுவனங்கள் உரிமம் பெற்ற பிறகு தான் சூதாட்டத்துக்குப் பணம் கட்டுவது, லாட்டரி நடத்துவது போன்ற சூதாட்டச் சேவைகளை வழங்க முடியும்.
புதிய சட்டம் சூதாட்டக் கூடங்
களிலும் இயந்திர அறைகளிலும் பினாமிகள் பேரில் யார் சூதாடி னாலும் அதைக் குற்றச் செயலாகக் கருதுகிறது.

