சிங்கப்பூரர்களுக்கு அங்க அடையாளத் தொழில்நுட்பத்துடன் (பயோமெட்ரிக்) தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 6,500 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொவிட்-19 தொற்று தீவிரம் குறைந்த பின்னர் பலரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முயலுவதால் கடவுச்சீட்டுக்கான தேவை சிங்கப்பூரர்களிடையே அதிகரித்து உள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னர் தினமும் கிட்டத்தட்ட 2,000 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
அதிகமானோர் புதிய கடவுச்சீட்டுக்கும் காலாவதியை நெருங்கும் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பம் செய்வதால் தீவு முழுவதும் கடவுச்சீட்டைப் பெறும் வசதியை சிங்போஸ்ட் அதிகரித்து உள்ளது.
கடவுச்சீட்டு வழங்கும் சிங்போஸ்ட் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோ
பரில் 39 ஆக இருந்தது.
தற்போது அது 46 ஆக அதிகரித்து உள்ளது. கடவுச்சீட்டை விநியோகிக்கும் சிங்போஸ்ட் கிளை
களின் எண்ணிக்கையும் 29ஆக கூடியுள்ளது.
புதிதாக நொவீனா, கில்லினி ரோடு கிளைகள் அதில் இணைந்து உள்ளன. இந்த முயற்சியின் விளைவாக கடந்த (ஜூன்) மாதம் மட்டும் 85,000 கடவுச்சீட்டுகளை சிங்கப்பூரர்கள் பெற்றுக்கொண்டனர்.
மே மாதத்தைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும். 43,500 கடவுச்சீட்டுகள் மே மாதம் வழங்கப்பட்டன.
கடவுச்சீட்டைப் பெற அஞ்சலகங்களை நாடுவோர் சில கிளைகளில் நீண்டநேரம் காத்திருக்க நேரிடும் என்பதால் அவற்றுக்குப் பதில் வேறு கிளைகளில் பெற பதிவு செய்துகொள்ளலாம் என சிங்போஸ்ட் பேச்சாளர் ஒருவர் யோசனை கூறியுள்ளார்.
அங் மோ கியோ, ஹவ்காங் சென்ட்ரல், மரின் பரேட், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய பகுதி களின் அஞ்சலகக் கிளைகளிலும் சிங்போஸ்ட் நிலையத்திலும் கடவுச்சீட்டு பெற நீண்டநேரம் ஆகலாம் என அவர் தெரிவித்தார்.

