ஹர்ஷிதா பாலாஜி
சுய முன்னேற்றத்திலும் சமுதாய மேம்பாட்டிலும் அதீத நாட்டம் கொண்டவர் 23 வயது பட்டதாரி நித்யா கிருஷ்ணன் (படம்). இவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்திய நடனத்துக்காக புதிய இணைப்பாட நடவடிக்கையைத் தோற்றுவித்து அதை வழிநடத்தியும் உள்ளார்.
பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பொறியியல் பட்டப்படிப்பான 'ரெனசான்ஸ்' பொறியியல் பாடத்திட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருந்ததுடன் 2018, 2021 ஆண்டுகளில் 'டீன்ஸ் லிஸ்ட்' எனப்படும் உச்சத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் நித்யா.
"நான் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கியபோது, அங்கு தமிழ்மொழி மன்றமும் சீக்கிய மன்றமும் மட்டுமே இந்திய கலாசாரம் சார்ந்த இணைப்பாட நடவடிக்கைகளாக அங்கீகரிக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய நடனத்துக்கான எந்த இணைப்பாட நடவடிக்கையோ குழுவோ அப்போது இல்லை," என்றார் நித்யா.
நாட்டியக் கலையில் அதிக ஆர்வமுள்ள நித்யா, தன் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து இந்திய நடனக் குழு ஒன்றைத் தனது மூன்றாம் ஆண்டில் தொடங்கிவைத்ததுடன் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். ஆரம்பகாலத்தில் குழுவை நடத்துவதற்குப் பல்கலைக்கழகத்தின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நண்பர்களின் உதவியோடும் மற்ற கலை ஆர்வலர்களின் ஆதரவோடும் இவர் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
"நடனக்குழுவில் இருந்த அனைவரும் நடனத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக மட்டுமே குழுவில் இணைந்திருந்தனர். பல்கலைக்கழகத்திடமிருந்து ஆதரவு இல்லாத நிலையிலும் இவர்கள் தொடர்ந்து குழுவிற்கு தங்கள் ஆதரவை அளித்தனர்," என்றார் நித்யா.
தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கே 'டி:2' நடனப்போட்டியில் இவர் தலைமையில் கலந்துகொண்ட நடனக்குழு, இறுதிச்சுற்று வரை முன்னேறியது. நடனப் பயிற்றுவிப்பாளரின்றி அனைத்தையும் தாங்களே சமாளித்தனர். நடனக் குழுவின் முயற்சிகளைக் கவனித்த பல்கலைக்கழகம், அதை ஓர் இணைப்பாட நடவடிக்கையாக பின்னாளில் அங்கீகரித்தது.
'சீஏசீ' எனப்படும் கலாசார நடவடிக்கைக் குழுமத்தின்கீழ் இதர கலாசார இணைப்பாட நடவடிக்கைகளோடு இந்திய நடனக்குழுவும் இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டில் குழுவை விட்டு வெளியேறிய பிறகும் நித்யாவின் பங்களிப்பை மறவாத அவரின் சக குழு உறுப்பினர்கள், அவரை 'சீஏசீ'யின் தலைமைத்துவ விருதுக்காக நியமனம் செய்தனர்.
'சீஏசீ'யைச் சேர்ந்த மற்ற 22 இணைப்பாட நடவடிக்கைகளைப் பிரதிநிதித்து நியமிக்கப்பட்ட மற்ற தலைவர்களிலிருந்து நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இறுதியில் விருதைத் தட்டிச்சென்றார்.
நடனக்குழுவை நிறுவியதுடன் படிப்பிலும் சிறந்து விளங்கிய நித்யா, 'ரெனசான்ஸ்' பொறியியல் பாடத்திட்டத்தின் ஓர் அங்கமான ஓராண்டு வெளிநாட்டு கற்றல் பயணம் மேற்கொண்டு புகழ்பெற்ற 'மெக்லாரன்' நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
சிறப்புப் பொறியியல் பாடத்திட்டத்தின் வழி ஒரே நேரத்தில் இளங்கலை பட்டத்தையும் முதுகலை பட்டத்தையும் பெற்று தற்போது கிரெடிட் சுவிஸ் வங்கியில் தொழில்நுட்ப ஆய்வாளராக பணிபுரியும் நித்யா, வெற்றிகளைச் குவித்த அதேநேரத்தில் சில சவால்களையும் சந்தித்ததாகக் கூறினார்.
"அனைத்து பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்கச் சிரமப்பட்டபோது சரியாக சாப்பிடுவதையும் தூங்குவதையும் கைவிட்டு விடுவேன். ஆனால், அவ்வாறு புறக்கணிப்பதால் பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதைப் புரிந்துகொண்ட பிறகு குடும்பம், நண்பர்கள் என என்னைச் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் நான் ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்தினேன்," என்கிறார் நித்யா.
"எதைச் செய்தாலும், அதை
விரும்பிச் செய்யவேண்டும். இதுவரை எனக்குப் பிடித்தமானதைச் செய்ததால்தான் நான் என்னையே மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. பல்கலைக்கழக வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிகளுக்கும் அதுவே காரணம்," என்று கூறுகிறார் நித்யா.

