நிதி அறிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, முதலீடு செய்யும் திறன்களை வளர்ப்பது என இளையர்களுக்காக இயங்கிவரும் லாப நோக்கமற்ற இளையர் அமைப்பு, 'ஃபின்கீக்ஸ்' (FinGeeks).
மாணவர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பு, வெஸ்ட் கோஸ்ட் இளையர் குழுவுடன் இணைந்து இம்மாதம் 23ஆம் தேதியன்று உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக நிதி அறிவு தொடர்பான பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிதி அறிவு தொடர்பாக பள்ளிகளில் கற்பிக்கப்படாததால், எதிர்காலத்தில் கடின உழைப்பால் பெறும் பணத்தை எவ்வாறு கையாள்வது, எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் இளையர்கள் பலர் திண்டாடுகிறார்கள்.
இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் ஃபின்கீக்ஸ் இயங்கி வருகிறது. நிதி அறிவு மீது ஆர்வங்கொண்ட 14 இளையர்கள், இந்த ஃபின்கீக்ஸ் ஆதரவுக் குழுவில் உள்ளனர்.
அவர்கள் நிதி நிர்வாகம் தொடர்பில் சான்றிதழ் பெற்றுள்ளதுடன் நிதி தொடர்பான போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவமும் உள்ள 17 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களாவர்.
நிதித் துறை நிபுணர்களுடன் கேள்வி பதில் அங்கம் ஒன்றும் இடம்பெற்றது. பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்ததாக ஃபின்கீக்ஸ் குழு நிறுவனர் சுவாமிநாதன் விசாகன், 17, குறிப்பிட்டார்.
'ஃபின்கீக்ஸ்' குழுவை அமைப்பதற்கான யோசனை, 2020ஆம் ஆண்டிறுதியில் தோன்றியதாகவும் 2021ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக தான் பயின்ற ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் ஐந்து உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.
தனக்கு 18 வயதாகும்போது அதிகாரபூர்வமாக லாப நோக்கமில்லா அமைப்பாக அரசாங்கத்திடம் குழுவைப் பதிவு செய்யவிருப்பதாகத் தனது எதிர்காலத் திட்டங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
"நிதி அறிவு என்பது நமது சிங்கப்பூர் கல்வித் திட்டத்தில் முறையாகக் கற்பிக்கப்படாத ஒன்று. மேலும் வருமான ஏற்றத்தாழ்வு சிங்கப்பூரில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இளையர்கள் நிச்சயமாக நிதி நிர்வாகத்தில் அக்கறை கொண்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு உதவ இந்த குழுவைத் தொடங்கினேன்," என்றார்.
பயிலரங்கில் 32 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
செய்தி: அருணா கந்தசாமி

