மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
சிங்கப்பூரில் சமூக அளவிலான கிருமிப் பரவல் கடந்த ஒரு வாரமாகப் படிப்படியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், மருத்துவமனைகளில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
பராமரிப்பு இல்லங்களில் தங்கு பவர்களில் மேலும் பலருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மருத்துவமனையில் தங்கும் நோயாளிகளை அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே நேரில் சென்று பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் நோயாளியின் படுக்கை அருகில் இருக்கலாம்.
கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளை அதிகபட்சம் ஐந்து பேர் நேரில் சென்று பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே படுக்கை அருகில் இருக்கலாம்.
நோயாளிகள் அருகில் சென்று அவர்களை பார்க்க வழங்கப்படும் அதிகபட்ச நேரம் தொடர்ந்து 30 நிமிடங்களாக இருக்கும் என்று அமைச்சு கூறியது.

