புருணையின் பட்டத்து இளவரசர் அல் முஹ்டாடி பில்லா சிங்கப்பூருக்கு இவ்வாரம் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். எட்டாவது சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் திட்டத்துக்கு அவர் தலைமையின்கீழ் புருணை பிரமுகர்கள் வருவதாக வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.
இந்தத் திட்டம் 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருநாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் சந்தித்து நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ள இது முக்கிய தளமாக அமைகிறது.
இத்திட்டத்தை சிங்கப்பூரும் புருணையும் மாறி மாறி ஏற்று நடத்துகின்றன.
மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியனின் அழைப்பை ஏற்று புருணைபிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சருமான பட்டத்து இளவரசர் பில்லா இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூரில் இருப்பார்.
பட்டத்து இளவரசருடன் அவரது மனைவியான இளவரசி சாராவும் அவர்களது மூன்று பிள்ளைகளும் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.
பட்டத்து இளவரசரின் வருகை சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான நெருங்கிய நல்லுறவை மறுஉறுதி செய்கிறது என்று அமைச்சு கூறியது.
இனி வரும் காலங்களில் சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
பட்டத்து இளவரசர் விக்டோரியா பள்ளி, விக்டோரியா அரங்கம், அவர் தெம்பனிஸ் ஹப், ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா- சாங்கி கடற்படைத் தளம் ஆகியவற்றுக்கு வருகை புரிவார் என்று தெரிவிக்கப்பட்டது.