சிவப்பு-மஞ்சள்-பச்சை நிறத்துக்கு மாறும் போக்குவரத்து சமிக்ஞைகள் பொருத்தப்பட்டு இருக்கும் சாலைச் சந்திப்புகளில், வலது பக்கம் திரும்புவதன் தொடர்பிலான விபத்துகள் 40 விழுக்காடு குறைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜூரோங் குழுத்தொகுதி எம்.பி. ஷான் ஹுவாங்கின் கேள்விக்கு அமைச்சர் ஈஸ்வரன் நேற்று முன்தினம் அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
798 சாலைச் சந்திப்புகளில் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்புக்குறி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
2024 முதல் காலாண்டிற்குள், இங்குள்ள 1,600 சாலைச் சந்திப்புகளில் 1,200 சந்திப்புகளில் இத்தகைய சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட இருக்கின்றன. சிவப்பு-மஞ்சள்-பச்சை சமிக்ஞை விளக்குகள் உள்ள சாலைச் சந்திப்புகளில், அம்புக்குறி பச்சை நிறத்துக்கு மாறிய பிறகே வாகனமோட்டிகள் வலது பக்கம் திரும்ப முடியும். இதனால், எதிர்த்திசையில் வரும் வாகனங்களுடன் விபத்து ஏற்படும் சாத்தியம் குறைகிறது.
சாலைச் சந்திப்புகளில் வலது பக்கம் திரும்புவதன் தொடர்பில் 2018ல் மரணம் விளைவித்த இரு விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு சிவப்பு-மஞ்சள்-பச்சை சமிக்ஞை அம்புக்குறிகளை அதிகாரிகள் பொருத்தத் தொடங்கினர்.
சாலைச் சந்திப்பு ஒன்றில் இந்த அம்புக்குறி சமிக்ஞைகளைப் பொருத்துவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதில், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டதா, அவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் வேகம், அப்பகுதியில் உள்ள சாலை குறுகலான ஒன்றா போன்ற அம்சங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கிறது.

