ஈசூன் வட்டாரத்தின் எண் 81, லோரோங் சென்சாருவில் அமைந்திருக்கும் ஆர்டோ பொழுதுபோக்குப் பூங்கா (படம்) அடுத்த ஆண்டு மத்தியில் மூடப்படவிருக்கிறது.
குடியிருப்புக் கட்டடங்களுக்கு வழிவிட்டு அது அமைந்திருக்கும் இடமும், எண் 91 லோரோங் சென்சாருவில் தற்போது 'கிரவுண்ட் அப் இனிஷியேட்டிவ்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு செயல்படும் இடமும் காலி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வாடகைக்கு விடப்பட்ட காலம் முடிவடைந்த பிறகு காலி செய்யும்படி இரு இடங்களின் உரிமையாளர்களுக்கும் தகவல் தரப்பட்டதாக சிங்கப்பூர் நில ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. இடம் மாறுவதற்கு உதவும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
காத்திப் ரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆர்டோ பூங்காவில் உணவு, பானக் கடைகள், மீன் பிடிப்புக்கான கடைகள் போன்றவற்றுடன் உயிருள்ள ஆமைகளின் அருங்காட்சியகமும் உள்ளது.
ஏறத்தாழ 600 ஆமைகள் உள்ள இந்த அருங்காட்சியக உரிமையாளர் அருகிலேயே வேறு இடம் தேடிக்கொண்டிருக்கிறார்.
ஆர்டோ பூங்காவில் உள்ள சில உணவகங்களும், கடைக்காரர்களும் ஹா பார் வில்லா ரயில் நிலையத்துக்கு அருகே எண் 27, வெஸ்ட் கோஸ்ட் ஹைவேக்கு இடம்மாறத் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது.