யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூரின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வண்ணம் மென்பொருள் பொறியாளரான நட்சத்திரம் பிரேம்குமார், 35, 'தேசமே, என் தேசமே' என்ற பாடலை தேசிய தினத்தை ஒட்டி இயக்கி, ஒலிப்பதிவு செய்துள்ளார். இப்பாடலின் மூலம் சிங்கப்பூரின் இயற்கை அழகு, வளர்ச்சி, பொருளியல் வல்லமை போன்றவற்றைப் பதிவு செய்திருப்பதாக இவர் கூறு கிறார்.
ஆண்டுதோறும் தேசிய தினத்தையொட்டி ஆங்கிலப் பாடல்கள் அதிகம் இயற்றப்படுவதை உணர்ந்த பிரேம்குமார், நாட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் ஒரு தமிழ்ப் பாடலைத் உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காகக் கடந்த ஓராண்டு காலமாகத் தன் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம் என்றும் பகிர்ந்துகொள்கிறார்.
திருவாட்டி பிரபு காந்தியுடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ள பிரேம்குமார், பல ஆண்டுகளாக பாடல்கள், காணொளிகள், குறும்படங்கள் போன்றவற்றை இயக்கி வந்தவர்.
"சிங்கப்பூரின் தற்போதைய நிலையை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக அதிகம் அறிந்திராத பகுதிகள், நவீன வட்டாரங்கள் என சிங்கப்பூரில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்களைக் காணொளியில் காட்சிப்படுத்தியதே பாடலின் சிறப்பு அம்சமாகும்.
வருங்காலச் சந்ததியினர் இந்தக் காணொளியைப் பார்க்கும்போது, நாடு மேலும் எத்தகைய வளர்ச்சி கண்டுள்ளது என்பதை அறிந்துகொள்வர்," என்றும் கூறுகிறார் பிரேம்குமார்.
தேசிய தினத்தையொட்டி கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று தேசிய நூலகத்தில் இவரின் பாடல் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்தப் பாடல் பல்வேறு சமூக ஊடகத் தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினருக்கு வருங்
காலத் தலைமுறையினரான குழந்தைகள் நன்றி கூறுவது போலவும் பாடல் காட்சி அமைந்துள்ளது.
பாடல் வரிகளை எழுதிய கவிஞர் நெப்போலியன், "சிங்கப்பூரின் சிறப்புகளை எளிமையான வார்த்தைகள் மூலம் எடுத்துச்சொல்ல முயன்றுள்ளேன். நான்கு அதிகாரத்துவ மொழிகளில் 'நன்றி' என்ற வார்த்தையை தொகையறாவாக வரிகளில் இணைத்துள்ளேன். சிங்கப்பூரின் வரலாற்றைக் கூறும் இப்பாடல், காலம் கடந்து நிலைத்து நிற்கும்," என்று நம்பிக்கையுடன் கூறினார். இசைத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஷ்ரவன் கலை, இப்பாடலுக்கு இசையமைத்துள்ளதோடு சௌம்யா தணிகாசலம் என்ற பாடகியுடன் இணைந்து பாடியும் உள்ளார்.

