பொன்மணி உதயகுமார்
ஈராண்டுகால இடைவெளிக்குப்பின் 'சிண்டா ஃபுட்சால் சவால் 2022', கடந்த மாதம் 29ஆம் தேதிஅன்று ஈசூன் ஃபுட்சால் அரங்கத்தில் சிண்டா காற்பந்து சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது. 13 முதல் 25 வயது வரையிலான இளையர்கள் போட்டியிட்டனர். கலந்துகொண்ட அணிகள் $2,500 மதிப்பிலான பரிசுகளை வென்றனர்.
இப்போட்டிகளின் மூலம் மீள்திறன், ஒழுக்கம், பொறுப்பேற்றல் பண்புகளை இளையர்களிடத்தில் வளர்ப்பதும் அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிவதற்கு வழிவகுப்பதுமே சிண்டா காற்பந்து சங்கத்தின் நோக்கமாகும்.
"சங்கம் ஏற்பாடு செய்யும் காற்பந்துப் பயிற்சிகளில் கற்பிக்கப்படும் திறன்களை இளையர்கள் தங்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்," என்று சிண்டாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி திரு ரவிந்திரன் நாகலிங்கம் நம்புகிறார். இளையர்களை இணைப்பதற்கும் ஈர்ப்பதற்கும் விளையாட்டு ஒரு சிறந்த வழி என்றும் இவர் நம்புகிறார்.
போதைப் புழக்கத்திற்கு எதிரான தேசிய மன்ற உறுப்பினராக இருக்கும் இவர், போதைப்பொருள் பயன்பாடு சமூகத்தைச் சீரழிக்கக்கூடியது என்று கூறுகிறார். போதைப்பொருள் புழக்கம் வேண்டாமென இளையர்களிடையே அறிவுறுத்துவதைக் காட்டிலும் அவர்களே சுயமாக முடிவெடுத்து அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிவது சிறந்தது என்கிறார் இவர்.
இளையர்கள் மத்தியில் ஒரு பிரச்சினையாக போதைப்பொருள் உருவெடுப்பதை எதிர்கொள்ள, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவோடு சிண்டா அமைப்பு சேர்ந்து போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் ஓர் அங்கமாக சிண்டா காற்பந்து சங்கத்தைச் சேர்ந்த இளையர்கள், போதை ஒழிப்புத் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் போதை ஒழிப்புப் பயிலரங்கில் பங்கேற்ற 18 வயது கார்த்திகா, போதைப்பொருளின் தீய விளைவுகள் பற்றி அறிந்துகொண்டு அதை சக விளையாட்டாளர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார்.
சிண்டா ஃபுட்சால் சவாலில் பெண்கள் அணிக்கும் போட்டிகள் நடத்தப்படுவதை அறிந்துகொண்ட இவர், தன் அணியுடன் கலந்து கொண்டார். காற்பந்தில் ஆர்வம் இல்லையென்றாலும் இம்மாதிரியான போட்டிகளின்வழி கிடைக்கும் அனுபவங்களுக்காக அவற்றில் பங்கேற்குமாறு கார்த்திகா இளையர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
நான்கு வருடங்களுக்கு முன் சிண்டா காற்பந்து சங்கத்தில் சேர்ந்த 20 வயது வர்ஷினி, முதன்முறையாக இப்போட்டியில் கலந்துகொண்டார்.
வாரந்தோறும் இரண்டு முறை நடைபெறும் காற்பந்து பயிற்சிகளில் ஈடுபடும் இவருக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனுடன் காற்பந்து விளையாடியதன் மூலம் இவருக்கு இவ்விளையாட்டில் ஆர்வம் கூடியது. இந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சிண்டா காற்பந்து சங்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததெனக் கூறுகிறார்.
சிண்டா காற்பந்து சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான 19 வயது ப்ரனீத், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் தகுதி பெற (Sports Coaching) பயின்று வருகிறார். சங்கத்தின் பயிற்சியாளரிடம் இருந்து பயிற்சிபெறுவது மட்டுமல்லாமல் தன்னை விட இளம் வயதினருக்குப் பயிற்சி அளித்தும் வருகிறார். கற்றுக்கொள்வதைத் தனது பள்ளிப் பாடங்களிலும் கையாண்டு பயனடைந்து வருவதாக இவர் பகிர்ந்துகொண்டார். கல்வியை என்றும் கைவிடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் இவர் வலியுறுத்துகிறார்.
காற்பந்துப் பயிற்சிகள் தனக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தந்ததுடன் உடலை உறுதியாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடிக்கவும் வழிகாட்டியதாக பகிர்ந்துகொண்டார் 19 வயது தேஜா. கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இப்போட்டியில் பங்கேற்க முடியாமல் போன நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடு
களின்றி முழுமையான ஒரு குழுவாகச் சேர்ந்து விளையாடியதில் தான் மகிழ்ச்சி கொள்வதாகவும் தேஜா கூறுகிறார்.

