உட்லண்ட்சில் இறுதிச் சடங்கு வாகனம் தீப்பிடித்துக் கொண்டது

உட்லண்ட்சில் இறுதிச் சடங்கு வாகனம் தீப்பிடித்துக் கொண்டது

1 mins read
c818d9e5-8cba-4bd7-938a-58a209052ac3
சம்பவம் உட்லண்ட்ஸ் ஸ்த்ரீட் 31 புளோக் 313 அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நடந்தது. படம்: ஷின் மின் செய்தித்தாள் வாசகர் -

தொங்கும் விளக்குகளும் சீனப் பாரம்பரிய வடிவிலான கூரையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இறுதிச் சடங்கு வாகனம் ஒன்று உட்லண்ட்சில் தீப்பிடித்துக்கொண்டது.

சம்பவம் உட்லண்ட்ஸ் ஸ்த்ரீட் 31 புளோக் 313 அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று நடந்தது.

இறுதிச் சடங்கு நடந்த இடத்தின் அருகே வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கு அது என்று ஷின் மின் டெய்லி செய்தித்தாள் தெரிவித்தது.

அங்கிருந்த ஆடவர்கள் சிலர், வாளிகளில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இறுதிச் சடங்குக்காக பின்னர் வேறு ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் வரும் முன்பே தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புளோக் 313ல் வசிக்கும் திருவாட்டி லெட்சுமி, 59, கார் நிறுத்துமிடத்தில் புகை கிளம்பியதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

"நிறைய புகை கிளம்பியதைப் பார்த்தேன். பிளாஸ்டிக் எரியும் நாற்றம் அடித்தது. ஐந்து ஆடவர்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி தீயை அணைத்தனர். பத்தே நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது," என்றார் திருவாட்டி லெட்சுமி.

தீக்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.