தேசிய அணிவகுப்பு நடைபெற்றபோது மரினா பே மிதக்கும் மேடை ஒரு பொருளால் வெடிப்புக்கு உள்ளாகும் என்று பொய்யான தகவலைத் தெரிவித்ததன் தொடர்பில் 18 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுபற்றி அந்த ஆடவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவிட்டார். பார்வையாளர்கள் பகுதியில் அமைந்திருக்கும் 27ஆம் வரிசையில் உள்ள இருக்கைக்கு அடியில் வெடிக்கச் செய்யும் கருவி இருந்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இளையரின் டுவிட்டர் பதிவு குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 7.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
இரண்டு மணிநேரத்துக்குள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, அங் மோ கியோ காவல்துறைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் தென்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
வழக்கு தொடர்பான தடயங்களாக, அதிகாரிகள் இரண்டு கைத்தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளையருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 50,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

