'நாட்டாஸ்' பயணச் சந்தை இவ்வாண்டு நடைபெறுகிறது.
சிங்கப்பூர் தேசிய பயண முகவர்கள் சங்கத்தின் (நாட்டாஸ்) இந்த மூன்று நாள் சந்தை 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக இப்போது சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கு ஐந்தில் வெள்ளிக்கிழமையன்று (12 ஆகஸ்ட்) தொடங்கியது.
சந்தையில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
சுற்றுப்பயண முகவைகள், தேசிய சற்றுலா அமைப்புகள், பயணக் காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு இருந்த அளவைப் போலவே, இந்த ஆண்டு சந்தைக்கு 80,000 பேர் முதல் 100,000 பேர் வரை வருகை தருவர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், சந்தை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வெளிநாடுகளுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் பத்து மடங்கு அதிகமாக 311,000 பேருக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, விடுமுறை நிமித்தம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக நாட்டாஸ் தலைவர் ஸ்டீவன் லெர் கூறினார்.
அதேபோல, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடக்கும் சந்தையில் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று பயண முகவைகள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கொவிட்-19க்குப் பிறகு மக்கள் சுற்றுப் பயணங்களில் அதிகம் செலவிட விரும்புகிறார்கள்.
பலரும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று 'நார்தர்ன் லைட்ஸ்' என்ற அதிசய ஒளியைக் காண விரும்புகிறார்கள் என்று 'ஈயூ ஹாலிடேஸ்' எனும் நிறுவனத்தின் இயக்குநர் ஓங் ஹான் ஜி கூறினார்.
சுவிட்சர்லாந்து, பின்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜப்பான் செல்லவும் சுற்றுப் பயணிகளிடம் அதிக நாட்டம் இருப்பதாகத் தெரிகிறது.
துருக்கிக்கு செல்லவும் அதிகமானோர் விரும்புகிறார்கள்.
சொந்தமாகப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்வதைவிட, குழு சுற்றுப் பயணத் திட்டங்களில் கலந்துகொண்டு பயணம் செய்யவே முன்பைவிட அதிகமானோர் விரும்புகிறார்கள்.
இது புதிய பயண பாணியாக தலையெடுத்துள்ளது.

