வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பொங்கோல், குவீன்ஸ்வே கிளை அலுவலகங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வேறு இடங்களுக்கு மாறவுள்ளன. பொங்கோல் கிளை இம்மாதம் 31ஆம் தேதிவரை 80 பொங்கோல் ஃபீல்டு என்ற முகவரியில் செயல்படும்.
பின்னர் செப்டம்பர் ஒன்று முதல் 1 பொங்கோல் டிரைவ் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சமூக மையத்தில் செயல்படவுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
பொங்கோல் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஒன் பொங்கோல் ஹப்' வளாகத்தில் அமைந்துள்ள செர்விஸ்எஸ்ஜி செண்டரில் உள்ள 20க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளின் சேவைகளைக் குடியிருப்பாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வசதி அமைந்திடும்.
விரைவில் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தங்ளின் ஹால்ட் வட்டாரம் மாற்றியமைக்கப்பட உள்ளதால், குவீன்ஸ்வே கிளை வேறு இடத்துக்கு மாறுவதுடன் குவீன்ஸ்டவுன் கிளை என்றும் பெயர் மாற்றம் காணவுள்ளது.
தற்போதைய கிளை செப்டம்பர் 2 வரை 46 காமன்வெல்த் டிரைவ் பகுதியில் செயல்படும். பின்னர், செப்டம்பர் 5 முதல் புளோக் 38A மார்கிரெட் டிரைவில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பொங்கோல், குவீன்ஸ்டவுன் கிளைகளில் சுயசேவை மின்னியல் இயந்திரங்கள், AXS மற்றும் ரொக்கக் கட்டண இயந்திரங்கள் இருப்பதுடன் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்குச் சேவைத் தூதர்களும் அங்கு நிறுத்தப்படுவர்.
புதிய பொங்கோல் கிளை வாரநாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். புதிய குவீன்ஸ்டவுன் கிளை வாரநாள்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

