பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'சீனத்தில் ராமாயணம்' (Ramayana Retold in Chinese) எனும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் இசைக் கலைஞர் டாக்டர் சுவா சூ பொங் காலை 11 மணியிலிருந்து 12.30 மணி வரை இணையம்வழி பேசவிருக்கிறார்.
இந்தியப் புராணமான ராமாயணம், உலகமெங்கும் பரவியிருப்பதை சிங்கப்பூரர்களுக்குத் தெரிவிப்பதும் அதன் புகழைப் புரியவைப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். அதுமட்டுமின்றி, அறிவுபூர்வமான இவ்வுரையாடல் மூலம் மக்களிடையே கலை குறித்தும் கலாசாரம் குறித்தும் ஆழமான புரிதலை ஏற்படுத்த முடியும் என்று சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் நம்புகிறது.
சீனக் கலையான 'தியோச்சு ஓப்ரா' வடிவில் டாக்டர் சுவா 1991ஆம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மனியில் இந்நிகழ்ச்சியைப் படைத்தார். அதைத் தொடர்ந்து, நான்கு வெவ்வேறு சீனக் கலை வடிவங்களிலும் கைப்பாவை நாடகங்களாகவும் இசை நாடகங்களாகவும் ராமாயணத்தை மாற்றி படைத்துள்ளார்.
இப்படைப்புகள் சிங்கப்பூர், சீனா, வியட்னாம், கம்போடியா உட்பட 10 நாடுகளில் அரங்கேறியுள்ளன. பன்னாட்டு மேடை நாடக விழாக்களிலும் இந்நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டுள்ளன.
இரு கலாசாரங்களை இணைக்கும் இந்தக் கலைப் படைப்புகளின் மூலம் ஏற்பட்ட அனுபவங்களையும் எதிர்நோக்கிய சவால்களையும் பற்றி பாரம்பரிய இசை இயலாளர் டாக்டர் சுவா, உரையாடலின்போது பகிர்வார்.
சிறுவயதிலிருந்தே கலை மீது ஆர்வம் கொண்ட டாக்டர் சுவா, கல்வியாளராக, நாடக எழுத்தாளராக, இயக்குநராக, நடன அமைப்பாளராக கலை உலகிற்குப் பங்களித்துள்ளார். 30 ஆண்டுகளாக பல்லின கலைகளையும் கலாசாரங்களையும் இணைக்கும் நிகழ்ச்சிகளையும் ஆதரித்து ஏற்பாடு செய்துள்ளார்.